போடி அதிவிரைவு ரெயிலில் கூடுதல் பெட்டி இணைப்பு
|முன்பதிவு பெட்டி எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
போடி,
போடியில் இருந்து சென்னைக்கு வாரத்தில் 3 நாட்கள் அதிவிரைவு ெரயில் இயக்கப்படுகிறது. இந்த ெரயிலில் ஒரு பெண்கள் பெட்டி உள்பட 4 முன் பதிவில்லாத பெட்டிகள், 4 சாதாரண முன்பதிவு பெட்டிகள், 7 மூன்று அடுக்கு ஏ.சி. பெட்டிகள், 2 அடுக்கு ஏ.சி. பெட்டிகள்-2, ஒரு முதல் தர ஏ.சி. பெட்டியுடன் இயக்கப்பட்டது. இந்நிலையில் போடி-சென்னை அதிவிரைவு ரெயிலில் கூடுதலாக ஒரு முன்பதிவில்லாத பெட்டி இணைக்க வேண்டும் என்று பல்வேறு ரெயில் பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் நேற்று சென்னையில் இருந்து போடி வந்த அதிவிரைவு ரெயிலில் மூன்று அடுக்கு ஏ.சி. பெட்டியில் ஒரு பெட்டி குறைக்கப்பட்டது. அதற்கு பதிலாக முன்பதிவில்லாத கூடுதல் பெட்டி ஒன்று இணைக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அந்த ரெயிலில் பெண்கள் பெட்டி உள்பட 5 முன்பதிவில்லாத பெட்டிகள் இடம் பெற்றுள்ளது. இதேபோல் சாதாரண முன்பதிவு பெட்டி எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.