< Back
மாநில செய்திகள்
அவதூறு வழக்கு:  நடிகை கஸ்தூரி தலைமறைவு?
மாநில செய்திகள்

அவதூறு வழக்கு: நடிகை கஸ்தூரி தலைமறைவு?

தினத்தந்தி
|
10 Nov 2024 10:03 AM IST

தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் நடிகை கஸ்தூரிக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், அவர் தலைமறைவு ஆகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரைப்பட நடிகை கஸ்தூரி அண்மையில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய போது, தெலுங்கு பேசும் மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். அவரது இந்தப் பேச்சுக்கு தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, தெலங்கானாவிலும் கடும் கண்டனங்கள் குவிந்தன. தமிழக பாஜகவும் நடிகை கஸ்தூரியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

சென்னை, மதுரை உள்ளிட்ட பல இடங்களில் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையே நடிகை கஸ்தூரி தனது பேச்சுக்கு மன்னிப்புக் கோரினார். எனினும், அவர் மீது தமிழகம் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது.

அவதூறு வழக்கில் நேரில் ஆஜராகுமாறு கஸ்தூரிக்கு போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர். இந்த நிலையில், கஸ்தூரி தலைமறைவு ஆனதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் உள்ள வீட்டை பூட்டிவிட்டு கஸ்தூரி தப்பி சென்றதாகவும் அவரது செல்போன் எண்ணும் ஸ்விட்ச் ஆப் ஆகியிருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து, கஸ்தூரியை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்