< Back
மாநில செய்திகள்
ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை - போக்குவரத்துத் துறை

கோப்புப்படம்

மாநில செய்திகள்

ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை - போக்குவரத்துத் துறை

தினத்தந்தி
|
29 Jan 2025 7:20 PM IST

ஆட்டோ கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்று போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் ஆட்டோ சங்கங்கள் சமீபத்தில் கட்டணத்தை உயர்த்தி அறிவித்திருந்தன. அதன்படி, ஆட்டோவில் பயணம் செய்வோர் முதல் 2 கிலோ மீட்டருக்கு ரூ. 50, அடுத்த ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் ரூ. 18 என்ற அளவில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. மேலும் இரவு நேரங்களில் பயணித்தால் பகல் நேரத்தைவிட கூடுதலாக 50 சதவீத கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் இது அடுத்த மாதம் (பிப்ரவரி) 1-ம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டால் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் புகார் அளிக்கலாம் என்று போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக போக்குவரத்துத்துறை ஆணையர் வெளியிட்டுள்ள விளக்கத்தில், "ஆட்டோ கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. ஆட்டோ கட்டணத்தை உயர்த்துவது தொடர்பான முடிவு அரசின் பரிசீலனையில் உள்ளது. ஆட்டோ சங்கங்கள் தன்னிச்சையாக கட்டணத்தை உயர்த்த முடியாது.

சில ஆட்டோ சங்கங்கள் பிப்.1 -ம் தேதி முதல் கட்டணத்தை உயர்த்த உள்ளதாக கவனத்திற்கு வந்ததுள்ளது. ஆட்டோக்கள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் வட்டார போக்குவரத்து அலுவலர்களிடம் புகார் அளிக்கலாம். புகாரின் அடிப்படையில் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆட்டோ ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்