அண்ணாமலையின் செயல் கேலிக்கூத்து - ஆர்.எஸ்.பாரதி விமர்சனம்
|காலம் முழுவதும் அண்ணாமலையால் காலணி அணிய முடியாது என்று ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
சென்னை,
திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
அண்ணா பல்கலைக்கழகம் யாருடைய நிர்வாகத்தின் கீழ் இயங்குகிறது என்பதை எதிர்க்கட்சிகள் தெரிந்து கொள்வது அவசியம். துணைவேந்தர் அனுமதியின்றி அண்ணா பல்கலை. வளாகத்திற்குள் யாரும் நுழைய முடியாது. சம்பவம் நடந்த சில மணி நேரத்திலேயே குற்றவாளியை தமிழக காவல்துறை கைது செய்தது. பல்கலை. வளாகத்தில் பாதுகாப்பு இல்லை என்றால் அதற்கு யார் பொறுப்பேற்க முடியும்.
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் எதிர்க்கட்சியினர் அரசியல் செய்கின்றனர். கைதான ஞானசேகரன் திமுகவைச் சேர்ந்தவர் என பொய் குற்றச்சாட்டுகளை கூறுகின்றனர். அனைவருக்குமான அரசாக திமுக அரசு உள்ளது. அதிமுக ஆட்சியில் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் என்ன நடவடிக்கைகள் எடுத்தீர்கள்?. பெண்கள், குழந்தைகளை பாதுகாக்கும் அரசாக திமுக அரசு உள்ளது.
சாட்டையால் அடித்துக்கொண்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் செயல் கேலிக்கூத்தாக உள்ளது; வேடிக்கையானது. பகுத்தறிவுவாதிகள் யாரும் ஏற்று கொள்ள மாட்டார்கள். அண்ணாமலையில் போராட்டத்தை பார்த்து மக்கள் சிரிக்கிறார்கள். உத்தரபிரதேசம் மற்றும் பாஜக ஆளும் மாநிலங்களில் நடக்கும் சம்பவங்களுக்கு அண்ணாமலை தினமும் சாட்டையால் அடித்துக்கொள்ள வேண்டும். காலம் முழுவதும் அண்ணாமலையால் காலணி அணிய முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.