அதிமுக உறுப்பினர்கள் மீதான நடவடிக்கை வாபஸ் - சபாநாயகர் அப்பாவு
|முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் கோரிக்கையை ஏற்று அதிமுக உறுப்பினர்கள் மீதான நடவடிக்கை திரும்பப்பெறப்பட்டதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.
சென்னை,
கவர்னர் உரையின்போது பேரவையில் பதாகைகளுடன் வந்த அதிமுகவினர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது என்று சபாநாயகர் அப்பாவு-விடம் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு பதிலளித்து பேசிய சபாநாயகர் அப்பாவு,
கவர்னர் உரையன்று நடந்தவற்றை எவராலும் ஏற்றுக் கொள்ள முடியாது. கவர்னர் உரையன்று உரிமை மீறலில் ஈடுபட்டோர் மீது உரிய விசாரணை நடத்தப்படும். இப்பிரச்சினையானது அவை உரிமை மீறல் குழுவுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவித்தார். இதனை தொடர்ந்து பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்,
விதிகளை மீறிய அதிமுகவினர் மீது என்ன நடவடிக்கை? என நான் கேட்டதை ஏற்று, உரிமை மீறல் குழு விசாரிக்கும் என நீங்கள் ஒரு தீர்ப்பு அளித்துள்ளீர்கள். எனினும், இனி இதுபோன்ற செயல்களில் ஈடுபடமாட்டார்கள் என உறுதியளித்தால் நடவடிக்கையை திரும்ப பெறலாம் என்று பேசினார். இதனையடுத்து அதிமுகவினர் மீதான நடவடிக்கை வாபஸ் பெறப்பட்டதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.