ஜாபர்சாதிக் ஜாமீன் மனு: தள்ளுபடி செய்தது சென்னை சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு
|சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் ஜாபர்சாதிக் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு.
சென்னை,
போதைப்பொருட்கள் கடத்தல் வழக்கில் கைதான திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் மீது சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை தனியாக ஒரு வழக்கை பதிவு செய்து கைது செய்தது. மேலும் இந்த வழக்கில் ஜாபர்சாதிக்கின் சகோதரர் முகமது சலீம் என்பவரும் கைது செய்யப்பட்டார்.
சிறையில் இருந்து வரும் ஜாபர் சாதிக், முகமது சலீம் ஆகியோர் ஜாமீன் கோரி சென்னை சி.பி.ஐ. கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அதில் கைது செய்யப்பட்ட தங்களிடம் அமலாக்கத்துறை ஏற்கனவே விசாரணை நடத்தி முடித்துவிட்டதாகவும் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் ஜாமீன் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
இந்த ஜாமீன் மனு சென்னை சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு நீதிபதி எழில் வேலவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜாபர் சாதிக் மற்றும் அவரது சகோதரருக்கு ஜாமீன் வழங்க அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
ஜாபர் சாதிக்கிற்கு ஜாமீன் வழங்கினால் அவர் மீண்டும் இதேபோன்ற தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட வாய்ப்பு இருப்பதாகவும் சாட்சிகளைக் கலைப்பது, ஆவணங்களை அழிப்பதிலும் ஈடுபட வாய்ப்பு இருப்பதால் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என அமலாக்கத் துறை தரப்பில் வாதிடப்பட்டது.
இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், நீதிபதி தீர்ப்பை ஒத்திவைத்து இருந்தார். இந்த சூழலில் ஜாமீன் மனு தொடர்பாக நீதிபதி எழில் வேலன் நேற்று தீர்ப்பளித்தார். தற்போதைய நிலையில் ஜாபர் சாதிக் மற்றும் அவரது சகோதரர் முகமது சலீம் ஆகிய இருவருக்கும் ஜாமீன் வழங்க முடியாது என்று கூறிய நீதிபதி எழில் வேலன், ஜாமீன் தொடர்பான இருவரின் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.