ஓடும் ரெயிலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த டிக்கெட் பரிசோதகர்
|ஓடும் ரெயிலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த டிக்கெட் பரிசோதகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்,
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்த 34 வயதான பெண் ஒருவர் சென்னையில் பணியாற்றும் தனது கணவரை பார்த்துவிட்டு நேற்று முன்தினம் இரவு தாம்பரத்தில் இருந்து உழவன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் தனது தாயார் மற்றும் குழந்தையுடன் ஏறினார்.
அவர்களுக்கு கிடைத்த டிக்கெட்டுகள் மேல் படுக்கை வசதியுடன் இருந்ததால், அந்தப் பெண் ரெயிலில் கீழ்படுக்கை வசதி ஒதுக்கி தருமாறு டிக்கெட் பரிசோதகர் தாமஸ் வெல்லஸியி்டம் கேட்டார். அவர்களுக்கு கீழ்படுக்கை வசதியை ஒதுக்கி கொடுத்த டிக்கெட் பரிசோதகர் தாமஸ்வெல்லஸி , அந்த பெண்ணுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பெண் கூச்சலிட்டு உதவி கேட்டதாக தெரிகிறது.
இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் மயிலாடுதுறை ரெயில்வே போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவவடிவேல் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதைத்தொடர்ந்து டிக்கெட் பரிசோதகர் தாமஸ்வெல்லஸி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.