மீண்டும் சர்ச்சை: கவர்னர் பங்கேற்ற விழாவில் நிறுத்தப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து
|மதுரையில் நடைபெற்ற இளம் தொழில் முனைவோருக்கான கருத்தரங்கில் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார்.
மதுரை,
மதுரை - அழகர்கோவில் சாலையிலுள்ள தனியார் ஓட்டலில் இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) மற்றும் யங் இந்தியா அமைப்பு சார்பில், இளம் தொழில் முனைவோருக்கான கருத்தரங்கம், கலந்துரையாடல் நிகழ்ச்சி இன்று நடந்தது. இதில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார்.
நிகழ்ச்சி தொடங்கியதும் முதலில் தேசிய கீதம், பிறகு தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும் என, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறிய போதிலும், தடுமாற்றம் அடைந்த மாணவிகள் தமிழ்த்தாய் வாழ்த்து பாட தொடங்கினர். இதையடுத்து அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். பின்னர், தேசிய கீதம் பாடினர். தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப்பட்டது.
ஏற்கனவே, கவர்னர் ஆர்.என். ரவி பங்கேற்ற நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்தில் 'திராவிட நல்திருநாடு' என்ற வார்த்தை விடுபட்டது சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது. தற்போது மீண்டும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாதியில் நிறுத்தப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.