தத்தெடுத்து வளர்த்த குழந்தை இறந்த சோகத்தில் விஷம் குடித்த தாய் - மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
|தத்தெடுத்து வளர்த்த குழந்தை இறந்த துக்கத்தில் இருந்த தாய் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
கரூர்,
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள திருக்காம்புலியூர் ஊராட்சி தண்ணீர் பாலம் கிராமத்தை சேர்ந்தவர் கணபதி. இவரது மனைவி சித்ரா. இவர்கள் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் ஆசிரமத்தின் மூலம் கடந்த ஓராண்டுக்கு முன்பு கிஷாந்த் (வயது 1½) என்ற குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வந்தனர். நேற்று முன்தினம் காலை சித்ரா குழந்தை கிஷாந்துக்கு சாப்பாடு ஊட்டி விட்டார். பின்னர் வழக்கம்போல், குழந்தை வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தது.
சித்ரா வீட்டிற்குள் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது, குழந்தை கிஷாந்த் வீட்டின் அருகே உள்ள தென்கரை பாசன வாய்க்காலில் மூழ்கி இறந்தது தெரியவந்தது. இதையடுத்து குழந்தையின் உடல் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் அந்த குழந்தையின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
இந்த நிலையில் குழந்தை இறந்த துக்கம் தாளாமல் சித்ரா நேற்று முன்தினத்தில் இருந்தே மிகவும் மனமுடைந்து சோகமாக காணப்பட்டார். நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து (பூச்சிக்கொல்லி) வீட்டிற்குள் மயங்கி விழுந்தார். இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் சித்ராவை மீட்டு சிகிச்சைக்காக முசிறியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து மாயனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.