< Back
மாநில செய்திகள்
கடற்கரையில் எலும்பு கூடாக கரை ஒதுங்கிய மனித சடலம்... குமரியில் பரபரப்பு
மாநில செய்திகள்

கடற்கரையில் எலும்பு கூடாக கரை ஒதுங்கிய மனித சடலம்... குமரியில் பரபரப்பு

தினத்தந்தி
|
25 Nov 2024 11:54 PM IST

கன்னியாகுமரி அருகே கடற்கரையில் எலும்பு கூடாக மனித சடலம் ஒன்று கரை ஒதுங்கியது.

குமரி,

கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு அருகே கூட்டுமங்கலம் கடற்கரை பகுதிக்கு நேற்று அந்த பகுதியை சேர்ந்த சிலர் சென்றனர். அப்போது எலும்பு கூடாக ஒரு மனித சடலம் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து குளச்சல் கடலோர போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பிறகு கரை ஒதுங்கிய மனித சடலத்தை கைப்பற்றினர். அந்த பிணம் ஆணா? பெண்ணா? என அடையாளம் காண முடியாத அளவுக்கு காட்சி அளித்தது. மேலும் சங்கு, சிப்பிகள் உடலின் மீது படித்திருந்தது. பிணமாக மீட்கப்பட்டவர் 2 மாதங்களுக்கு முன்பே கடலில் மூழ்கி இறந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து போலீசார் அந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து மண்டைக்காடு கிராம நிர்வாக அலுவலர் தீபக் கடலோர போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து பிணமாக கரை ஒதுங்கியவர் யார்? எப்படி இறந்தார்? என விசாரணை நடத்தி வருகின்றனர். கடற்கரையில் எலும்பு கூடாக மனித சடலம் ஒன்று ஒதுங்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்