தீபமலை மீது சிக்கி தவித்த ஆந்திர பெண்ணை மீட்டு முதுகில் சுமந்து வந்த வனக்காப்பாளர்
|தீபமலையில் கடந்த 13-ந் தேதி மகா தீபம் ஏற்றப்பட்டது.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இந்த நிலையில் கோவிலில் நடைபெற்ற கார்த்திகை தீபத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக மகா தீபம் கடந்த 13-ந் தேதி மாலையில் கோவில் பின்புறம் உள்ள மலை உச்சியில் ஏற்றப்பட்டது.
தொடர்ந்து 14-ந் தேதி மாலை முதல் நேற்று முன்தினம் மாலை வரை பவுர்ணமி என்பதால் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கடந்த 13-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரையில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மகாதீபம் மற்றும் பவுர்ணமியையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.
இந்த நிலையில் திருவண்ணாமலை மகாதீபத்தின்போது மலையேற பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், ஆந்திராவை சேர்ந்த அன்னபூர்ணா என்ற பெண், அத்துமீறி மலை மீது ஏறியுள்ளார். இதையடுத்து திரும்ப வரத் தெரியாமல் 2 நாட்களாக தீபமலை மீது தவித்து வந்துள்ளார். அதனை தொடர்ந்து அந்த பெண் இருப்பிடத்தை கண்டுபிடித்த வனக்காப்பாளர்கள் அங்கு சென்று அவரை பாதுகாப்பாக மீட்டனர்.
பின்னர் மலை இறங்க முடியாமல் சோர்வாக இருந்த பெண்ணை வனக்காப்பாளர் ஒருவர் தனது முதுகில் சுமந்து மலைக்கு கீழே கொண்டு வந்தார். வனக்காப்பாளரின் இந்த செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.