முருகன் திருக்கல்யாண வைபவத்தில் வைக்கப்பட்ட தேங்காய் ரூ.3 லட்சத்திற்கு ஏலம்
|தேனி மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் சூரசம்ஹாரம் அரோகரா கோஷம் முழங்க நடைபெற்றது.
தேனி,
முருகன் கோவில்களில் நடைபெறும் விழாக்களில், கந்தசஷ்டி விழா சிறப்பு வாய்ந்தது ஆகும். அதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் கடந்த 2-ந்தேதி கந்தசஷ்டி விழா தொடங்கியது. கந்த சஷ்டி விழாவின் சிகர நிகழ்ச்சியாக கருதப்படும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நேற்று கோலாகலமாக நடந்தது.
தேனி மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களிலும் திரளான பக்தர்கள் முன்னிலையில் சூரசம்ஹாரம் அரோகரா கோஷம் முழங்க நடைபெற்றது. சூரசம்ஹாரத்தை தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய முருகனை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
இந்த நிலையில், போடி அருகே 350 ஆண்டுகள் பழமை வாய்ந்த பால சுப்பிரமணியன் கோவிலில் திருக்கல்யாணம் இன்று விமர்சையாக நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருக்கல்யாண வைபவத்தில் வைக்கப்பட்ட தேங்காய் ஏலம் விடப்பட்டது. அந்த தேங்காயை போடி ரங்கநாதபுரத்தைச் சேர்ந்த முருக பக்தர் ஒருவர் ரூ.3 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்து வாங்கி சென்றார். ஏலத்தொகைய அறிந்து மெய் சிலிர்த்த பக்தர்கள் அரோகரா கோஷம் எழுப்பினர். 6 ஆயிரத்தில் தொடங்கிய ஏலத்தொகை ரூ.3 லட்சத்தில் நிறைவு பெற்றது.
ஒவ்வொரு வருடமும் திருக்கல்யாண வைபவம் நிறைவு பெற்றதும் திருமாங்கல்யம் வைக்கப்பட்ட ஒற்றை தேங்காய் ஏலம் விடப்படுகிறது. கடந்த ஆண்டு ரூ.65 ஆயிரத்திற்கு ஏலம் எடுக்கப்பட்ட தேங்காய் இந்த ஆண்டு ரூ.3 லட்சம் வரை சென்றுள்ளது.