வெம்பக்கோட்டை அகழாய்வில் சுடுமண்ணாலான ஆண் உருவ பொம்மை கண்டெடுப்பு
|ஆண் உருவ பொம்மை உடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டு உள்ளது.
சென்னை,
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜயகரிசல்குளத்தில் 3-ம் கட்ட அகழாய்வு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அகழாய்வில் இதுவரை 16 குழிகள் தோண்டப்பட்டுள்ளன.
நேற்று கூடுதலாக தோண்டப்பட்ட குழியில் பியான்ஸ் எனப்படும் மூலப்பொருளால் தயாரிக்கப்பட்ட உருண்டை வடிவ மணி, மாவு கற்களால் செய்யப்பட்ட நீள்வட்ட வடிவ மணிகள், அலங்கரிக்கப்பட்ட சங்கு வளையல், கண்டெடுக்கப்பட்டன. இதுவரை 2,850க்கும் மேற்பட்ட பழங்கால பொருட்கள் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், இன்றைய அகழாய்வு பணியின்போது, சுடுமண்ணாலான சிவப்பு வண்ணம் தீட்டப்பட்ட, சிகை அலங்காரத்துடன் கூடிய ஆண் உருவ பொம்மை உடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டு உள்ளது. முதல் இரண்டு கட்டங்களைவிட 3-ம் கட்ட அகழாய்வில் தொடர்ந்து கல்மணிகள் அதிகளவு கிடைத்து வருவதாக அகழாய்வு இயக்குனர் கூறினார்.