< Back
மாநில செய்திகள்
அரசு பள்ளிகளில் இன்று ஒரே நாளில் மட்டும் 9,100 மாணவர்கள் சேர்க்கை: பள்ளிக்கல்வித்துறை
மாநில செய்திகள்

அரசு பள்ளிகளில் இன்று ஒரே நாளில் மட்டும் 9,100 மாணவர்கள் சேர்க்கை: பள்ளிக்கல்வித்துறை

தினத்தந்தி
|
18 March 2025 7:46 PM IST

அரசு பள்ளிகளில் இன்று ஒரே நாளில் மட்டும் 9,100 மாணவர்கள் சேர்ந்துள்ளனர் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழ்நாடு முழுவதும் உள்ள 37 ஆயிரத்து 553 அரசு பள்ளிகளில் கடந்த 1-ந்தேதி மாணவர் சேர்க்கை தொடங்கியது. மாணவர் சேர்க்கையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை விறுவிறுப்பாக தற்போது வரை நடந்து வருகிறது. இதில் பெரும்பாலும் 1-ம் வகுப்புக்கு தான் மாணவர் சேர்க்கை நடக்கிறது. கடந்த 1-ந்தேதி முதல் இன்று வரையிலான 18 நாட்களில் வந்த 12 வேலை நாட்களில் இந்த மாணவர் சேர்க்கை நடந்துள்ளது. இன்று ஒரே நாளில் மட்டும் 9,100 மாணவர்கள் சேர்ந்துள்ளனர் என்றும் மொத்தம் 81 ஆயிரத்து 797 மாணவர்கள் சேர்ந்துள்ளதாகவும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

அரசு பள்ளிகளில் அதிகரிக்கும் நோக்கில், பல்வேறு முயற்சிகள் பள்ளிக்கல்வித் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி அங்கன்வாடி மையங்களில் படித்து முடிக்க இருக்கும் 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளின் பட்டியலை சேகரித்து அந்தந்த மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு வழங்கி, அவர்களையும் அரசு பள்ளிகளில் சேர்க்கும் வகையில் நடவடிக்கையை பள்ளிக்கல்வித்துறை எடுத்து வருகிறது. 5 லட்சம் மாணவர் சேர்க்கை என்ற இலக்கை நோக்கி முன்னேற வேண்டும் என்ற அறிவுறுத்தலையும் ஆசிரியர்களுக்கு கல்வித்துறை வழங்கி இருக்கிறது.

மேலும் செய்திகள்