பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரெயில் பணிகள் 90 சதவீதம் நிறைவு
|பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரெயில் பணிகள் 90 சதவீதம் நிறைவு பெற்றுள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னை,
சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டம், 116.1 கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இவற்றில் ஒன்று கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வரையிலான (26.1 கி.மீ.) வழித்தடம். மெட்ரோ ரெயிலுக்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
இதற்கிடையில் கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வரையிலான 4-வது வழித்தடத்தில் பூந்தமல்லி - போரூர் வரை மெட்ரோ ரெயில் பாதையை அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டிருந்தது.
இந்த நிலையில், சென்னை பூந்தமல்லி-போரூர் இடையே 90 சதவீத மெட்ரோ ரெயில் திட்டப் பணிகள் நிறைவு பெற்றுள்ளதாக அதன் இயக்குநர் அர்ஜுனன் தெரிவித்துள்ளார். வரும் பிப்ரவரிக்குள் 100 சதவீத பணிகள் நிறைவடைந்து மார்ச்-ஏப்ரலில் 90 கிமீ வேகத்தில் சோதனை ஓட்டம் நடத்த இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் சோதனை ஓட்டம் வெற்றி பெற்றதும் போரூர்-பூந்தமல்லியில் 2025 டிசம்பரில் மெட்ரோ ரெயில் சேவை நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.