அரையாண்டு தேர்வு முடிந்து பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை
|அரையாண்டு தேர்வு முடிந்து பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழ்நாட்டில் 2023-24ம் கல்வி ஆண்டுக்கான அரையாண்டு தேர்வு கடந்த 16-ந்தேதி தொடங்கியது. தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிப்பாடங்கள் மற்றும் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் உள்ளிட்ட பாடத்தேர்வுகளும் தேதி வாரியாக நடைபெற்றது. ஒருசில மாவட்டங்களில் புயல் மழையால் விடுமுறை அளிக்கப்பட்டது. அதனால் ரத்து செய்யப்பட்ட தேர்வுகள் அடுத்தடுத்த நாட்களில் நடத்தப்பட்டது.
இந்த நிலையில் நேற்று அனைத்து தேர்வுகளும் முடிவடைந்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதையடுத்து மாணவ-மாணவிகள் உற்சாகமாக பள்ளிகளில் இருந்து புறப்பட்டனர். விடுதிகளில் தங்கி இருந்து படித்த மாணவர்கள் நேற்று மதியத்துக்கு பிறகு சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். பெற்றோரும் வந்து மாணவர்களை அழைத்துச்சென்றனர். இதையொட்டி நேற்று மாலை பஸ், ரெயில்களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
அரையாண்டு தேர்வு விடுமுறை வருகிற 1-ந்தேதி வரை 9 நாட்கள் அளிக்கப்பட்டு உள்ளது. 2-ந்தேதி (வியாழக்கிழமை) மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுகிறது.