8-ம் ஆண்டு நினைவு தினம்: ஜெயலலிதா நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மரியாதை
|ஜெயலலிதாவின் 8-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார்.
சென்னை,
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 8-ம் ஆண்டு நினைவு தினம் இன்று (5-ம் தேதி) அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி தமிழம் முழுவதும் உள்ள அதிமுகவினர் ஜெயலலிதாவின் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். மேலும் பல்வேறு இடங்களில் அன்னதானமும் வழங்கி வருகின்றனர்.
இந்த நிலையில், நினைவு தினத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் வளையம் வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், கட்சி தொண்டர்கள், பல்வேறு அணிகளின் நிர்வாகிகளும் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
இதையடுத்து எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நினைவிட நுழைவாயில் உட்புறத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. எடப்பாடி பழனிசாமி உறுதிமொழி வாசிக்க அதை அனைவரும் திரும்ப வாசித்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.