< Back
மாநில செய்திகள்
சீமான் மீது தமிழ்நாடு முழுவதும் 70 வழக்குகள் பதிவு - போலீசார் விசாரணை தீவிரம்
மாநில செய்திகள்

சீமான் மீது தமிழ்நாடு முழுவதும் 70 வழக்குகள் பதிவு - போலீசார் விசாரணை தீவிரம்

தினத்தந்தி
|
11 Jan 2025 10:05 AM IST

பெரியார் குறித்து அவதூறாகப் பேசியதாக சீமான் மீது தமிழ்நாடு முழுவதும் 70 வழக்குகள் பதிவாகி உள்ளன.

சென்னை,

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சமீபத்தில் வடலூரில் பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்தார். இதற்கு திராவிட கழகத்தினர் உள்பட பலவேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து சீமான் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது.

சீமானின் இந்த பேட்டி சர்ச்சையானநிலையில், பெரியார் திராவிடர் கழகம் சார்பில் சென்னை நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டை நேற்று முன்தினம் முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. அப்போது நாம் தமிழர் கட்சியின் கரூர் மண்டல செயலாளர் சசிகுமாரின் கார் கண்ணாடி கல்வீசி தாக்கப்பட்டது.

புதுச்சேரி நெல்லித்தோப்பில் நிர்வாகிகள் கூட்டத்தில் நேற்று முன்தினம் பங்கேற்றிருந்த சீமானுக்கு எதிராக திராவிட இயக்க அமைப்புகளை சேர்ந்தவர்கள் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பெரியார் பற்றிய தன்னுடைய பேச்சு கொந்தளிப்பை ஏற்படுத்தி இருந்தாலும், தன்னுடைய கருத்தில் இருந்து பின்வாங்க போவதில்லை என்று சீமான் திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.

இந்த சூழலில் சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.க. சட்டத்துறை இணை செயலாளர் மருதுகணேஷ் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். இதேபோன்று தமிழகம் முழுவதும் சீமானுக்கு எதிராக தி.மு.க., திராவிட அமைப்புகள் சார்பில் தொடர்ந்து புகார் மனுக்கள் அளிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தற்போது வரையில் தமிழகம் முழுவதும் 70 வழக்குகள் சீமான் மீது பதிவாகி உள்ளது. இதன்படி சென்னை, கடலூர், கோவை, சேலம், மதுரை, தென்காசி, திருநெல்வேலி, திண்டுக்கல் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள போலீஸ் நிலையங்களில் தொடர்ந்து புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

முன்னதாக சீமானின் பேச்சை கண்டித்து தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் நேற்று வெளியிட்ட அறிக்கையில், 'பெரியாரை அவமரியாதை செய்து அமைதியை சீர்குலைத்தால் சட்டம் தன் கடமையை செய்யும்' என்று தெரிவித்திருந்தார்.

அதே வேளையில், பெரியார் பற்றி தான் கூறிய கருத்துகள் அனைத்தும் பெரியார் சொன்னதுதான். புத்தகத்தில் படித்துதான் இந்த கருத்துகளை சொல்லி வருகிறேன் என்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் சீமான் விளக்கி கூறியிருக்கிறார். எனவே சீமான் மீது சட்டரீதியாக கைது நடவடிக்கை எடுப்பது பற்றி சட்ட வல்லுனர்களின் கருத்துகளை போலீஸ் அதிகாரிகள் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே சீமான் மீது விரைவில் கைது நடவடிக்கை பாயும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் செய்திகள்