கோவையில் நேற்று ஒரே நாளில் 7 பேர் தற்கொலை
|கோவையில் நேற்று ஒரே நாளில் 7 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
கோவை,
கோவையில் தற்கொலை சம்பவம் அதிகரித்து வருகிறது. அதன்படி, நேற்று ஒரே நாளில் 7 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
அதன்படி, கோவை போத்தனூர் அருகே மகாலிங்கபுரத்தை சேர்ந்தவர் தரண்குமார். இவர் சரவணபிரியா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தரண்குமார், கட்டி டம் கட்ட தேவையான பொருட்களை வாடகைக்கு விடும் தொழில் செய்து வந்தார். இந்த தொழிலில் அவருக்கு ரூ.30 லட்சத்துக்கும் மேல் கடன் ஏற்பட்டாக கூறப்படுகிறது. அத்துடன் திருமணம் ஆகி 2½ ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை.
இதனால் சரவணபிரியா எப்போதும் சோகத்தில் இருந்து உள்ளார். இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சரவணபிரியா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவருக்கு திருமணம் முடிந்து 2½ ஆண்டுகளே ஆவதால் போத்தனூர் உதவி கமிஷனர் மணிவர்ணன் விசாரித்து வருகிறார்.
கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் சிவசங்கர். இவருக்கு திருமணம் முடிந்து 1 ஆண்டுஆகிறது. ஆனால் 3 மாதத்தில் மனைவி பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது. இதனால் மனஉளைச்சலில் இருந்த சிவசங்கர், வீட்டில் யாரிடமும் பேசுவது இல்லை என்று தெரிகிறது. மேலும் வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மருதமலை அடிவாரம் அருகே அண்ணாநகரை சேர்ந்தவர் கல்யாணி. இவருடைய கணவர் பிரிந்து சென்றுவிட்டார். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடந்த கல்யாணி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். துடியலூர் அருகே வெள்ளக்கிணர் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து. இவருக்கு கால்வலி இருந்தது. அதற்கு சிகிச்சை பெற்றும் குணமாக வில்லை. இதனால் விரக்தி அடைந்த அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பீளமேடு சவுபாக்யா நகரை சேர்ந்தவர் கலைமணி. கட்டிட மேஸ்திரி. இவர் தனது மனைவியின் சகோதரியை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இதனால் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக வாழ்க்கையில் வெறுப்படைந்த கலைமணி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதைபோன்று சிங்காநல்லூரில் வசித்த வடமாநிலத்தை சேர்ந்த பக்ரம் சிங், அனீஷ் ஆகியோரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். இவ்வாறு கோவையில் நேற்று ஒரே நாளில் 7 பேர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். தற்கொலை சம்பவம் அதிகரித்து வருவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.