தமிழகத்தில் 6.36 கோடி வாக்காளர்கள் - இறுதி பட்டியல் வெளியீடு
|தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இன்று வெளியிட்டார்.
சென்னை,
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, கடந்த அக்டோபர் மாதம் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி துவங்கியது. அதன்படி 2024-ம் ஆண்டு ஆகஸ்ட் 20-ம் தேதி முதல் அக்டோபர் 18-ம் தேதி வரை, வாக்காளர் பட்டியலை சரிபார்த்தல், புகைப்பட அடையாள அட்டைகளில் உள்ள முரண்பாடுகளை நீக்குதல் மற்றும் தரமான புகைப்படங்களை இணைத்தல் போன்ற பணிகள் இந்திய தேர்தல் ஆணையத்தின் கீழ் செய்யப்பட்டன.
அதன் பிறகு அக்டோபர் 29ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு, அன்று முதல் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கான விண்ணப்பங்கள் நவம்பர் 28-ந்தேதி வரை பெறப்பட்டது. அதன் பின்னர் திருத்தங்களுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு நவம்பர் 29-ந்தேதி முதல் கடந்த 24-ந்தேதி வரை பரிசீலனை நடைபெற்றது. இந்த நிலையில் தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இந்தப்பட்டியலை தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது,
வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் 29.10.2024 அன்று வரைவுப் பட்டியல் வெளியீட்டுடன் தொடங்கியது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க/நீக்க/திருத்த/இடம் மாற்றம் செய்ய விண்ணப்பங்கள் 29.10.2024-ஆம் தேதியிலிருந்து 28.11.2024-ஆம் தேதிவரை பெறப்பட்டன.
மேற்கண்ட சிறப்பு சுருக்கமுறை திருத்த காலத்தின்போது வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தலுக்காக 14 லட்சத்து 2 ஆயிரத்து 132 விண்ணப்பங்கள் பெறப்பட்டு அவற்றில் 13 லட்சத்து 80 ஆயிரத்து 163 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. பெயர் நீக்கலுக்காக 5 லட்சத்து 16 ஆயிரத்து 940 விண்ணப்பங்கள் பெறப்பட்டு அவற்றில் 4 லட்சத்து 97 ஆயிரத்து 800 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.
மேலும், 2 லட்சத்து 15 ஆயிரத்து 244 வாக்காளர்களின் பதிவுகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. சிறப்பு சுருக்க முறைத் திருத்தத்தின் ஒருங்கிணைக்கப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி தமிழகத்தில் 6 கோடியே 36 லட்சத்து 12 ஆயிரத்து 950 வாக்காளர்கள் இருக்கின்றனர். 3 கோடியே 11 லட்சத்து 74 ஆயிரத்து 27 ஆண் வாக்காளர்களும், 3 கோடியே 24 லட்சத்து 29 ஆயிரத்து 803 பெண் வாக்காளர்களும், 9 ஆயிரத்து 120 மூன்றாம் பாலின வாக்காளர்களும் இருக்கின்றனர்.
வாக்காளர் பட்டியலினை, தலைமைத் தேர்தல் அதிகாரியின் வலைதளமான https://elections.tn.gov.in என்ற வலைதளத்திலும் காணலாம். அதில் வாக்காளர்கள் தங்கள் பெயரைச் சரிபார்த்துக் கொள்ளலாம். வாக்காளர் பட்டியல் தொடர் திருத்த நடைமுறை தற்போது செயல்பாட்டிலுள்ளது. 01.01.2025 அன்று 18 வயது நிரம்பிய தகுதியுள்ள நபர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாமல் இருந்தால், கீழ்க்கண்ட முறைகளில் விண்ணப்பிக்கலாம்:-
1.) வாக்காளர் பதிவு அதிகாரி அலுவலகத்தில் படிவம் 6-ஐ சமர்ப்பித்து விண்ணப்பிக்கலாம்.
2.) இணையம் மூலமாக www.voters.eci.gov.in என்ற வலைதளத்திலும் விண்ணப்பிக்கலாம்.
3.) கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து "Voter Helpline App" செயலியைத் தரவிறக்கம் செய்து அதன்மூலம் விண்ணப்பிக்கலாம்.
சிறப்பு சுருக்கமுறைத் திருத்த காலம் மற்றும் தொடர் திருத்த காலங்களில் பெறப்பட்ட முன்கூட்டிய விண்ணப்பங்கள் தொடர் திருத்த காலத்தின் போது அந்தந்த காலாண்டில் உரிய வாக்காளர் பதிவு அலுவலரால் பரிசீலிக்கப்படும். இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, இரண்டு அச்சிடப்பட்ட வாக்காளர் பட்டியல் நகல்களை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு வழங்குமாறு அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒருங்கிணைக்கப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின் மென் நகலினை (புகைப்படமின்றி) வாக்காளர் பதிவு அலுவலரிடமிருந்து ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு ரூ.100 வீதம் கட்டணம் செலுத்தி பெறலாம். இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கி, மாவட்ட தொடர்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
பொதுமக்கள் மாவட்ட தொடர்பு மையங்களை 1950 என்ற கட்டணமில்லாத் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தேர்தல் தொடர்பான தகவல்களை அறியலாம். தலைமைத் தேர்தல் அதிகாரியின் அலுவலகத்தில் 180042521950 என்ற கட்டணமில்லாத் தொலைபேசி எண்ணுடன் மாநிலத் தொடர்பு மையம் இயங்கி வருகின்றது. இவ்வாறு அவர் கூறினார்.