
சாத்தூரில் அனுமதியின்றி பட்டாசு தயாரிக்க முயன்ற 6 பேர் கைது

சாத்தூரில் அனுமதியின்றி பட்டாசு தயாரிக்க முயன்ற 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
விருதுநகர்,
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அப்பையநாயக்கன்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன் தலைமையில் போலீசார் அப்பையநாயக்கன்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தனியார் பட்டாசு ஆலைக்கு பின்புறம் உள்ள காட்டுப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் ஆட்கள் நடமாட்டம் இருப்பதை பார்த்து உடனடியாக அங்கு சென்று போலீசார் சோதனை நடத்தினர்.
அப்போது காட்டுப்பகுதியில் பட்டாசுகள் தயாரிக்க தேவையான மூலப்பொருட்கள் இருப்பது தெரியவந்தது. சங்கரலிங்கபுரத்தை சேர்ந்த ரவிக்குமார் (வயது 53), மீனாட்சிசுந்தரம் (52), நாகலட்சுமி (46), சுமன்குமார் (52), வீரராஜாமணி (44), நயினார்சாமி (44) ஆகிய 6 பேரும் அனுமதியின்றி பட்டாசு தயாரிக்க முயன்றது தெரியவந்தது.
இதையடுத்து பட்டாசு தயாரிக்க வைத்திருந்த மூலப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து குண்டலகுத்தூர் கிராம நிர்வாக அலுவலர் மலைபாண்டியன் கொடுத்த புகாரின் பேரில் அப்பையநாயக்கன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து 6 பேரையும் கைது செய்தனர்.