ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 6 அடி உயர திருவள்ளுவர் சிலை
|ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 6 அடி உயர திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டுள்ளது.
ஊட்டி,
கன்னியாகுமரி கடல் நடுவே 133 அடி உயர திருவள்ளுவர் சிலை கடந்த 2000-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது. தற்போது திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டு 25 ஆண்டுகள் ஆவதால் வெள்ளி விழா நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா கடந்த 30, 31 மற்றும் ஜனவரி 1-ந்தேதி கன்னியாகுமரியில் நடைபெற்றது. மேலும் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவை பிரபலப்படுத்த தமிழக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மாவட்ட நிர்வாகம் சார்பில் 6 அடி உயர திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டுள்ளது. இங்கு வரும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் திருவள்ளுவர் சிலையை பார்த்து புகைப்படம், செல்பி எடுத்து மகிழ்கின்றனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்தினர் கூறுகையில், ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 6 அடி உயரத்தில் திருவள்ளுவர் சிலை வைக்கப்பட்டு உள்ளது. அடுத்த ஒரு சில மாதங்கள் இந்த திருவள்ளுவர் சிலை பூங்காவில் இருக்கும் என்றனர்.