< Back
மாநில செய்திகள்
சுடுகாட்டில் புதைக்கப்பட்ட 6 பிணங்களை காணவில்லை - கிராம மக்கள் குற்றச்சாட்டு
மாநில செய்திகள்

சுடுகாட்டில் புதைக்கப்பட்ட 6 பிணங்களை காணவில்லை - கிராம மக்கள் குற்றச்சாட்டு

தினத்தந்தி
|
5 Dec 2024 9:47 AM IST

சுடுகாட்டில் புதைக்கப்பட்ட 6 பிணங்களை காணவில்லை என கிராம மக்கள் குற்றம் சாட்டினர்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே ஸ்ரீராமபுரம் ஊராட்சிக்கு உட்பட்டது, பூத்தாம்பட்டி ஏ.டி.காலனி. இங்கு 60-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு என்று தனியாக மயானம் அப்பகுதியில் உள்ளது. இந்தநிலையில் அதே ஊரை சேர்ந்த வாலிபர் ஒருவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடலை அடக்கம் செய்வதற்காக சுடுகாட்டில் குழி தோண்டுவதற்காக கிராம மக்கள் சென்றனர்.

அப்போது மயான பகுதியில் சுமார் 10 அடி ஆழத்துக்கு மண் அள்ளப்பட்டு இருந்தது. மேலும் அங்கு ஏற்கனவே இருந்த 6 சமாதிகளும், அதில் புதைக்கப்பட்டிருந்த 6 பிணங்களும் காணாமல் போயிருந்தன. இதனை பார்த்து கிராம மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பாக மக்கள் அப்பக்குதியில் விசாரித்ததில் நள்ளிரவு மயான பகுதிக்கு வந்த மர்மநபர்கள், மண்ணை அள்ளினர். அத்துடன் சமாதிகளையும் தோண்டிவிட்டு சென்றதும் தெரியவந்தது.

இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் மயானத்தில் மண் அள்ளியதை கண்டித்தும், சமாதிகளை தோண்டிவிட்டு சென்ற மர்மநபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் அங்குள்ள வேடசந்தூர்-எரியோடு சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் வேடசந்தூர் போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது போலீசாருடன் கிராம மக்கள் வாக்குவாதம் செய்தனர். மேலும் இதுதொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து கிராம மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியலால் வேடசந்தூர்-எரியோடு சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சுடுகாட்டில் புதைக்கப்பட்ட 6 பிணங்களை காணவில்லை என கிராம மக்கள் குற்றம் சாட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்