தி.மு.க. அரசை கண்டித்து சாட்டையால் அடித்துக்கொள்ளும் போராட்டம் - அண்ணாமலை பரபரப்பு பேட்டி
|நாளை பா.ஜ.க,வை சேர்ந்த ஒவ்வொருவரின் வீட்டின் முன்பும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அண்ணாமலை அறிவித்துள்ளார்.
சென்னை,
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொடுஞ்செயலில் ஈடுபட்ட ஞானசேகரன் (37) என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதற்கிடையே மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் பதிவு செய்யப்பட்ட எப்.ஐ.ஆர். பகிரங்கமாக வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த எப்.ஐ.ஆரில், மாணவி கூறிய புகார்கள் குறித்த விவரங்கள், மாணவியின் பெயர், அவரது முகவரி உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இடம்பெற்றிருந்தன. பாதிக்கப்பட்ட பெண்ணின் தகவல்கள் மறைக்கப்படாமல் சமூக வலைதளங்களில் அப்படியே வெளியிடப்பட்டதற்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அ.தி.மு.க., பா.ஜ.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில் பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தி.மு.க. அரசைக் கண்டித்து நாளை காலை 10 மணிக்கு தன்னை தானே சாட்டையால் அடித்துக்கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்தார்.
மேலும் அவர் கூறியதாவது:
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம். இதன்படி நாளை என் வீட்டின் முன், என்னை நானே 6 முறை சாட்டையால் அடித்துக் கொள்ளும் போராட்டம் நடத்தப் போகின்றேன். நாளை முதல் 48 நாட்கள் விரதம் இருந்து, ஆறுபடை முருகனிடம் முறையிட போகின்றேன். நாளை பா.ஜ.க,வை சேர்ந்த ஒவ்வொருவரின் வீட்டின் முன்பும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
அண்ணா பல்கலை. வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட விவகாரத்தில் 10 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து தண்டனை கொடுக்க வேண்டும். இனி மரியாதையெல்லாம் கிடையாது. நாளை முதல் எனது அரசியல் வேறு மாதிரி இருக்கும். ஆரோக்கியமான அரசியல், நாகரீகமான அரசியல், விவாதம், மரியாதை எல்லாம் இருக்காது.
இவ்வாறு அண்ணாமலை கூறினார்.