< Back
தமிழக செய்திகள்
கர்நாடகத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 28 லிட்டர் மதுபானங்கள் பறிமுதல்
தமிழக செய்திகள்

கர்நாடகத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 28 லிட்டர் மதுபானங்கள் பறிமுதல்

தினத்தந்தி
|
6 April 2025 9:39 PM IST

சட்டவிரோத மதுபான வர்த்தகத்தை கட்டுப்படுத்த தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக டிஜிபி அலுவலகம் தெரிவித்துள்ளது.

கிருஷ்ணகிரி,

தமிழகத்தில் கள்ளச்சாராய புழக்கத்தை கட்டுப்படுத்த, தமிழ்நாடு மதுவிலக்கு சட்டத்தை மிகவும் உறுதியாக அமல்படுத்தி வருகிறது. முதன்மையாக, போலி மதுபானம் தயாரிப்பு கூடங்கள், சட்ட விரோதமாக மதுபானங்கள் தயாரிக்கும் இடங்கள், போலி மதுபான வர்த்தகம் பிற மாநில மதுபானங்கள் கடத்தல்களை தடுக்க தொடர் கண்காணிப்பு மற்றும் வேட்டைகள் நடத்தி வருகிறது.

அமலாக்கப்பிரிவு புலனாய்வுத்துறை தற்போது மிக நுணுக்கமான நுண்ணறிவு தகவல்களை சேகரித்து, உடனடி மற்றும் தொடர் நடவடிக்கையால் சமீபத்தில் தமிழ்நாடு முழுவதும் சட்டவிரோதமாக கடத்தப்படும் மதுபாட்டில்கள் கண்டுபிடிக்கபட்டு உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற தொடர் நடவடிக்கைகளால், எரிசாராயம் போலி மதுபானம் மற்றும் வெளிமாநில மதுபான கடத்தல்களில் ஈடுபட்டு வந்த பல குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, கடத்தப்பட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டு துரித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வேலூர் மத்திய நுண்ணறிவு பிரிவு காவல் உதவி ஆய்வாளர் தலைமையில் கிருஷ்ணகிரி சுங்க சாவடி அருகே வாகன சோதனையின் போது லாரியை நிறுத்தி ஆய்வு செய்தபோது, அதில் கர்நாடக மதுபானம் 158 பாக்கெட்டுகள் (28.44 லிட்டர்) கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த புலனாய்வு துறையினர், ஓட்டுநரை கைது செய்தனர்.

கர்நாடகாவிலிருந்து மதுபானங்களை மதுரைக்கு கடத்திவந்து சட்டவிரோதமாக விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. பொது மக்கள் சட்டவிரோத மதுபான வர்த்தகம் தொடர்பான தகவல்களை இலவச தொலைபேசி எண்10581 அல்லது சி.யு.ஜி எண் 9498410581 என்ற எண்ணிற்கு அளிக்கலாம் என்று புலனாய்வுத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்