27-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்
|உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 27 Dec 2024 8:22 PM IST
மன்மோகன் சிங் இறுதிச்சடங்கு: பிரதமருக்கு கார்கே கடிதம்
மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு நினைவிடம் அமைக்கப்படும் இடத்தில் அவரது இறுதிச்சடங்கை நடத்தும்படி பிரதமர் மோடிக்கு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதி உள்ளார். இதுதொடர்பாக பிரதமரிடம் ஏற்கனவே தொலைபேசியில் பேசிய நிலையில், கடிதம் எழுதி உள்ளார்.
- 27 Dec 2024 7:21 PM IST
கூட்டத்தில் புகுந்த கார்.. 35 பேர் துடிதுடித்து பலி.. வாகன ஓட்டிக்கு மரண தண்டனை
சீனாவின் ஜுகாய் நகரில் உள்ள ஒரு பள்ளிக்கு வெளியே மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் திரண்டிருந்த சமயத்தில், அந்த வழியாக அதிவேகமாக வந்த கார், கூட்டத்தில் புகுந்தது. கடந்த மாதம் நடந்த இந்த கோர சம்பவத்தில் மாணவ, மாணவிகள் உள்ளிட்ட 35 பேர் கொல்லப்பட்டனர். இந்த கொடூரமான தாக்குதலை நடத்திய பேன் வெய்கியூ என்ற நபருக்கு கோர்ட்டு மரண தண்டனை விதித்துள்ளது.
- 27 Dec 2024 6:45 PM IST
பஞ்சாப் பேருந்து விபத்து- 8 பேர் பலி
பஞ்சாப் மாநிலம் பதிண்டா பகுதியில் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து, பாலத்தில் இருந்து ஓடையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், 8 பேர் உயிரிழந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர். அவர்களில் பலத்த காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பாலத்தில் தடுப்பு சுவரோ, தடுப்பு கட்டைகளோ இல்லை. தடுப்பு கட்டைகள் இருந்திருந்தால் விபத்து தவிர்க்கப்பட்டிருக்கலாம்.
- 27 Dec 2024 6:27 PM IST
மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட அண்ணா பல்கலைக்கழகத்தில் நாளை பகல் 12.30 மணியளவில் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆய்வு நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- 27 Dec 2024 5:50 PM IST
பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கீதா ஜீவன் உறுதி அளித்துள்ளார். சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் பலாத்காரம் தொடர்பாக புகார் அளிக்கப்பட்டதும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
- 27 Dec 2024 5:29 PM IST
ஜெர்மனியில் நாடாளுமன்றம் கலைப்பு
ஜெர்மனியில் நாடாளுமன்றத்தை கலைத்து ஜனாதிபதி பிராங்க் வால்டர் ஸ்டெய்ன்மியர் உத்தரவிட்டுள்ளார். பிப்ரவரி 23-ம் தேதி புதிய தேர்தல் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளார்.
சான்சலர் ஓலாப் ஸ்கால்ஸ் தலைமையிலான ஆளும் கூட்டணியில் விரிசல் ஏற்பட்ட நிலையில், கடந்த 16-ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பில் சான்சலர் ஸ்கால்ஸ் தோல்வி அடைந்தார். அரசு மெஜாரிட்டியை இழந்தது. முன்கூட்டியே தேர்தலை நடத்த பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் ஒப்புதல் அளித்ததையடுத்து, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
- 27 Dec 2024 5:17 PM IST
திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் இரவு 7 மணி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- 27 Dec 2024 4:19 PM IST
துப்பாக்கி சூடு.. வெடிகுண்டுகள் வீச்சு: மணிப்பூரில் மீண்டும் தாக்குதல்
மணிப்பூரின் இம்பால் கிழக்கு மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதிகளில் இருந்து கிராமங்கள் மீது ஆயுதக் குழுவினர் தாக்குதல் நடத்தினர். சனசாபி, தாம்னபோப்கி ஆகிய கிராமங்களை குறிவைத்து துப்பாக்கிகளால் சுட்டும், வெடிகுண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தி உள்ளனர். அவர்களுக்கு பாதுகாப்புப் படையினர் பதிலடி கொடுத்தனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. எனினும் அந்த கிராமங்களில் பதற்றம் நிலவுகிறது.