< Back
மாநில செய்திகள்
அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தால் 2 ஆண்டு சிறை தண்டனை - தமிழக அரசு எச்சரிக்கை
மாநில செய்திகள்

அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தால் 2 ஆண்டு சிறை தண்டனை - தமிழக அரசு எச்சரிக்கை

தினத்தந்தி
|
9 Jan 2025 7:52 PM IST

அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தால் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.

சென்னை,

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலராக இருந்த லூர்து பிரான்சிஸ், கடந்த 2023-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மணல் கொள்ளையர்களால் படுகொலை செய்யப்பட்டார். அதன் தொடர்ச்சியாக சில மாவட்டங்களிலும் கிராம நிர்வாக அலுவலர்கள் மீது தாக்குதல் நடந்தது. எனவே கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும், அவர்களுக்கு துப்பாக்கி வைத்துகொள்ள அனுமதி தர வேண்டும் என்று ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் தீர்ப்பளித்த ஐகோர்ட்டு, அரசு இது குறித்து உரிய முடிவு எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த உத்தரவின் அடிப்படையில் தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அமுதா, கிராம நிர்வாக அதிகாரி சங்கத்தின் மாநில பொது செயலாளர் அருள்ராஜுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

இந்திய தண்டனைச் சட்டம் (1860), பிரிவு 353 என்பது பொதுத்துறை ஊழியரின் கடமைகளைத் தடுக்க அல்லது தாக்குதலுக்கு உள்ளாக்குபவர்களுக்கு தண்டனை வழங்குகிறது. அதாவது ஒரு பொதுத்துறை ஊழியரின் கடமைகளை செய்ய தடுக்க அல்லது கடமையில் இருந்து விலக்க முயற்சிப்பவர்கள், 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டையும் அனுபவிக்க நேரிடும். அதே போல் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் (வன்முறை மற்றும் சேதங்கள் தடுப்பு) சட்டம், 1992- மூலம் அரசு ஊழியர்கள், கிராம நிர்வாக அதிகாரிகள் உரிய சட்டப் பாதுகாப்பைப் பெறுகின்றனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்