தமிழகத்தில் 2 பேருக்கு எச்.எம்.பி.வி. தொற்று உறுதி
|எச்.எம்.பி.வி. தொற்று குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னை,
சீனாவின் பல்வேறு மாகாணங்களில், எச்.எம்.பி.வி., (HMPV)எனப்படும், 'ஹியூமன் மெட்டா நியுமோ வைரஸ்' என்ற தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால் சீனாவில் உள்ள மருத்துவமனைகளில் மக்கள் குவிந்துள்ளனர். இந்த வைரஸ் தொற்றால் பாதிப்பு இல்லை என்றே கூறப்படுகிறது. எனினும் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தி இருந்தன.
இதற்கிடையில், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் எட்டு மாத ஆண் குழந்தைக்கு எச்.எம்.பி.வி வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் 3 மாத பெண் குழந்தைக்கும் எச்.எம்.பி.வி வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அந்த 2 குழந்தைகளுக்கும் தொடர் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. குஜராத்திலும் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களை தொடர்ந்து, தமிழகத்திலும் எச்எம்பிவி பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதாவது, சென்னையில் ஒரு குழந்தைக்கும், சேலத்தில் ஒரு குழந்தைக்கும் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இருவரது உடல்நிலையும் சீராக இருப்பதாகவும், அவர்கள் மருத்துவர்களின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும், சுகாதாரத்துறை கூறும்போது,
எச்எம்பிவி வைரஸ் காய்ச்சல் நீண்ட காலமாக வழக்கத்தில் இருக்கும் ஒரு வகை வைரஸ் காய்ச்சல் தான். அதனால், யாரும் அச்சப்பட தேவையில்லை. தும்மல், இருமல் வரும்போது வாய் மற்றும் மூக்கை மூடுதல், கைகளை கழுவினால் போதுமானது. நெரிசலான இடங்களில் முகமூடி அணிதல், தேவை ஏற்பட்டால் சுகாதார நிலையத்தை நாடலாம்." என கூறியுள்ளது.