< Back
மாநில செய்திகள்
முன்விரோதத்தில் 2 பேர் அடித்துக்கொலை: இளைஞர் வெறிச்செயல்
திண்டுக்கல்
மாநில செய்திகள்

முன்விரோதத்தில் 2 பேர் அடித்துக்கொலை: இளைஞர் வெறிச்செயல்

தினத்தந்தி
|
19 Feb 2025 3:12 AM IST

கொலை செய்யப்பட்ட இரண்டு பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

வத்தலக்குண்டு,

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகேயுள்ள கொன்னம்பட்டியைச் சேர்ந்தவர்கள் அழகுமலை (55), மனோகரன் (50). இவர்கள் இருவருக்கும் திருமணமாகவில்லை. கட்டடத் தொழிலாளிகளான இவர்கள் இருவரையும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அதே ஊரைச் சேர்ந்த குபேந்திரன் மகன் நவீன் (22) தாக்கினார். இதில் அவர்கள் இருவரும் காயமடைந்தனர். இதையடுத்து, இதுகுறித்து பட்டிவீரன்பட்டி காவல் நிலையத்தில் இரு தரப்பினரையும் அழைத்துப் பேசி சமரசம் செய்யப்பட்டது.

இந்தநிலையில் நேற்று இரவு அழகுமலையும், மனோகரும் வெங்கடாஸ்திரி கோட்டை அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது உருட்டுக்கட்டையுடன் அவர்களை பின்தொடர்ந்து நவீன் வந்தார். இதனை அவர்கள் கவனிக்கவில்லை. ஒரு கட்டத்தில், தான் வைத்திருந்த உருட்டுக்கட்டையால் அழகுமலையையும், மனோகரையும் சரமாரியாக நவீன் அடித்தார். தலையில் மாறி மாறி அடித்ததால் 2 பேரும் நிலைகுலைந்து கீழே விழுந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். அதன்பிறகு நவீன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த வத்தலக்குண்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் சிலமலை தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, வத்தலக்குண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து நவீனை தேடி வந்தனர். அவர் வத்தலக்குண்டு பஸ்நிலையம் அருகே பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று நவீனை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

மேலும் செய்திகள்