அரசு மாணவியர் விடுதிக்குள் புகுந்து குடிபோதையில் 2 சிறுவர்கள் ரகளை
|அரசு மாணவியர் விடுதிக்குள் புகுந்து மாணவிகளிடம் குடிபோதையில் ரகளை செய்த 2 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை- கோவில்பட்டி மெயின் ரோட்டில் குமாரபுரம் ஊருக்கு அருகே அரசு பிற்படுத்தப்பட்டோர் மாணவியர் விடுதி உள்ளது. இதில் கழுகுமலை மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர்.
தற்போது அரையாண்டு தேர்வு விடுமுறை காரணமாக சில பள்ளி மாணவிகள் தங்களது ஊர்களுக்கு சென்று விட்டனர். விடுதியில் தற்போது 35 மாணவிகள் தங்கி உள்ளனர்.நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் கழுகுமலை அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த 16 மற்றும் 17 வயது சிறுவர்கள் 2 பேர் மதுபோதையில் மாணவியர் விடுதிக்குள் அத்துமீறி புகுந்தனர். அங்கிருந்த மாணவிகளிடம் ஆபாசமாக பேசி ரகளையில் ஈடுபட்டனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவிகள் கூச்சலிட்டனர். உடனே 2 சிறுவர்களும் தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து விடுதி பராமரிப்பாளரான மாடத்தி அளித்த புகாரின்பேரில், கழுகுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக 2 சிறுவர்களையும் போலீசார் கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.