உயர் மின்கோபுரத்தில் பழுது பார்த்தபோது சோகம்: மின்சாரம் தாக்கி 2 ஒப்பந்த ஊழியர்கள் பலி
|இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி,
திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்தவர்கள் கலாமணி மற்றும் மாணிக்கம். இவர்கள் 2 பேரும் கே.கே. நகர் மின்வாரியத்தில் ஒப்பந்த ஊழியர்களாக பணியாற்றி வந்தனர். கேகேநகர் ஓலையூர் ரிங் ரோடு அருகே உயர் மின்கோபுரம் உள்ளது.
இங்கு நேற்று பராமரிப்பு பணி மேற்கொள்வதற்காக கலாமணி மற்றும் மாணிக்கம் ஆகியோர் சென்றனர். பராமரிப்பு பணியின் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்பிறகே கலாமணி, மாணிக்கம் ஆகியோர் பணியை தொடங்கி உள்னர். கலாமணி மின்கோபுரத்தின் மீது ஏறினார். மாணிக்கம் மின்கோபுரத்தில் கீழே நின்ற கலாமணிக்கு உதவி செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென்று மின்கோபுரத்தின் வயரில் மின்சாரம் பாய்ந்தது. கண்இமைக்கும் நொடியில் மின்சாரம் கலாமணியின் உடலில் பாய்ந்தது. மேலும் தீப்பிழம்பு ஏற்பட்ட நிலையில் கலாமணி மின்கோபுரத்திலேயே இறந்தார். அவரது உடல் மின்கோபுரத்தில் தொங்கியது. இந்த சம்பவத்தில் மாணிக்கம் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தார்
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து மணிகண்டம் போலீசார், மின்வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். தொடர்ந்து உயர்மின்கோபுரத்துக்கு வந்த மின் இணைப்பை துண்டித்தனர். பின்னர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மாணிக்கத்தை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே மாணிக்கம் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.