திருவண்ணாமலையில் கடந்த 3 நாட்களில் 1.75 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம்
|திருவண்ணாமலையில் கடந்த 3 நாட்களில் 1.75 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகாதீபம் நேற்று முன்தினம் நடந்தது. இதையொட்டி மாலை 6 மணிக்கு கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலையார் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. மகாதீபத்தை காண கடந்த 12-ந் தேதியில் இருந்தே ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலை வருகை தந்தனர்.
மகா தீபத்தை தொடர்ந்து கார்த்திகை மாதத்திற்கான பவுர்ணமி நேற்று மாலை 4.17 மணிக்கு தொடங்கியது. அதனால் பவுர்ணமி கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் மாலை 4 மணி முதல் அதிகரிக்க தொடங்கியது. 2-ம் நாள் மகா தீபம் காட்சியை கண்டு வணங்கியபடி ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
பவுர்ணமி இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 3.13 மணிக்கு நிறைவடைந்தது. இதையொட்டி பக்தர்கள் விடிய, விடிய கிரிவலம் சென்றனர். கிரிவலம் சென்ற பக்தர்கள் கிரிவலப்பாதையில் உள்ள அஷ்ட லிங்க கோவில்கள் மற்றும் கிரிவலப்பாதை காஞ்சி சாலையில் உள்ள இடுக்கு பிள்ளையார் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். கிரிவலம் சென்ற பக்தர்கள் அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய குவிந்தனர். பக்தர்கள் ராஜகோபுரம் மற்றும் அம்மணி அம்மன் கோபுரம் வழியாக கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் நீண்ட வரிசையில் சுமார் 4 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
இந்த நிலையில், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, கடந்த 13, 14 தேதிகள் மற்றும் இன்று மாலை 7 மணி நிலவரப்படி, 1.72 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை (திங்கள்கிழமை) சுப்பிரமணியர் தெப்பல் உற்சவம் நடைபெற உள்ளது. நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் கார்த்திகை தீபத்திருவிழா நிறைவு பெறுகிறது.