< Back
மாநில செய்திகள்
தஞ்சாவூரில் ரூ.43.58 கோடியில் முடிவுற்ற 127 திட்டப்பணிகள்: உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்
மாநில செய்திகள்

தஞ்சாவூரில் ரூ.43.58 கோடியில் முடிவுற்ற 127 திட்டப்பணிகள்: உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்

தினத்தந்தி
|
7 Nov 2024 8:27 PM IST

கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்திட நாங்கள் எப்போதும் தயாராக இருப்போம் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (7.11.2024) தஞ்சாவூர் மாவட்டம், பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.43.58 கோடி செலவில் முடிவுற்ற 127 திட்டப்பணிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து, ரூ.28.26 கோடி மதிப்பீட்டிலான 2 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 14,525 பயனாளிகளுக்கு ரூ.154 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

தஞ்சை மாவட்டத்தில் நடைபெறுகின்ற இந்த அரசு விழாவில் சுமார் 15 ஆயிரம் பயனாளிகளுக்கு 154 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்குதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றேன். கடந்த 3 நாட்களாக விழுப்புரம், திருச்சி மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு இன்று தஞ்சைக்கு உங்களையெல்லாம் சந்திக்க வந்துள்ளேன்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, வேளாண்மைத்துறை, கூட்டுறவுத்துறை, சமூக நலத்துறை என நம்முடைய திராவிட மாடல் அரசினுடைய பல்வேறு துறைகளின் சார்பாக, அனைத்து விதமான நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு கொடுக்க இருக்கின்றோம். நம்முடைய திராவிட மாடல் அரசினுடைய திட்டங்கள் ஒவ்வொரு குடும்பத்தையும் எட்டிப் பார்க்கின்றது. உங்களுடைய மகிழ்ச்சிதான் இந்த திட்டங்களுடைய வெற்றிக்கு ஒரே சாட்சியாகும்.

இந்திய அளவில் கல்வி, சுகாதாரம், நகர்புர மேம்பாடு, மகளிர் பாதுகாப்பு, மகளிர் முன்னேற்றம் என 13 துறைகளில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முதல் மாநிலமாக இருக்கின்றது என்று நான் கூறவில்லை. மத்திய அரசினுடைய நிதிஆயோக் அமைப்பின் பட்டியல் தெரிவிக்கின்றது. அதேபோல தொழில் துறையில் சிறந்து விளங்குகின்ற மாநிலம் என்ற பட்டியலிலும் நம்முடைய மாநிலம் முதலிடத்தில் உள்ளது.

இந்தியாவிலேயே பணிக்கு, வேலைக்கு செல்கின்ற பெண்கள் 42 சதவீதம் உள்ள மாநிலமாக நம் தமிழ்நாடு உள்ளது என்பது நமக்கு கூடுதல் பெருமையாகும். நம்முடைய முதலமைச்சர் அவர்கள் அவருடைய கனவுத்திட்டம் நான் முதல்வன் திட்டத்தை இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

நம்முடைய திராவிட மாடல் அரசின் திட்டங்களை, சாதனைகளை நீங்கள் உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு எடுத்துக் கூற வேண்டும். இந்த திராவிட மாடல் அரசினுடைய முகங்களே மக்களாகிய நீங்கள்தான். நீங்கள்தான் இந்த அரசின் பிராண்ட் அம்பாசிடர்ஸ். உங்களுக்காக உழைத்திட, நீங்கள் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்திட நாங்கள் எப்போதும் தயாராக இருப்போம் என்று கூறிக்கொள்கின்றேன். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்