மதுரை ஜல்லிக்கட்டில் பங்கேற்க 12,623 காளைகள், 5,346 மாடுபிடி வீரர்கள் பதிவு
|ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு பிறப்பித்து உள்ளது.
மதுரை,
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் அவனியாபுரத்தில் வருகிற 14-ந்தேதியும், பாலமேட்டில் 15-ந்தேதியும், அலங்காநல்லூரில் 16-ந் தேதியும் நடக்கிறது.
இந்தநிலையில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முகூர்த்தக்கால் நடப்பட்டு முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த போட்டிகளை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு பிறப்பித்து உள்ளது. அதனை பின்பற்றி போட்டிகள் நடக்கின்றன.
இந்த நிலையில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய 3 இடங்களில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கான ஆன்லைன் முன்பதிவு நேற்று தொடங்கியது. காளை உரிமையாளர்கள் மற்றும் மாடுபிடி வீரர்கள் மதுரை மாவட்ட நிர்வாகத்தின் madurai.nic.in என்ற இணையதள முகவரி மூலமாக தங்களது பெயர்களை முன்பதிவு செய்து வந்தனர். இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணிக்குள் முன்பதிவு செய்திட வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க 12,632 காளைகளும், 5,347 மாடுபிடி வீரர்களும் பதிவு செய்துள்ளனர்.
அலங்காநல்லூர்:-
காளைகள் - 5,786
மாடுபிடி வீரர்கள் - 1,698
அவனியாபுரம்:-
காளைகள் - 2,026
மாடுபிடி வீரர்கள் - 1,735
பாலமேடு:-
காளைகள் - 4,820
மாடுபிடி வீரர்கள் - 1,914