< Back
மாநில செய்திகள்
ஆண்டுக்கு 100 நாட்கள் சட்டமன்ற கூட்டத்தை நடத்த வேண்டும் - ஆர்.பி. உதயகுமார்
மாநில செய்திகள்

ஆண்டுக்கு 100 நாட்கள் சட்டமன்ற கூட்டத்தை நடத்த வேண்டும் - ஆர்.பி. உதயகுமார்

தினத்தந்தி
|
22 Dec 2024 2:22 PM IST

100 நாட்கள் சட்டமன்ற கூட்டத்தை நடத்துவோம் என்ற தேர்தல் வாக்குறுதியை செயல்படுத்த முதல் அமைச்சர் முன்வர வேண்டும் என ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்.பி. உதயகுமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழகத்தின் வளர்ச்சிக்காக, சட்டங்களை இயற்றி மக்களுக்கான திட்டங்களை கொடுத்து செயல்படுத்த வேண்டிய சட்டசபை கடந்த நான்காண்டு திராவிட முன்னேற்றக்கழக அரசு, மக்கள் பிரச்சனைகளை விவாதிப்பதற்கு பிரதான எதிர்க்கட்சிகளுக்கு போதிய நேரம் ஒதுக்கப்படுகிறதா? என்றால் மிகப்பெரிய அளவில் கேள்விக்குறியாகவே இருக்கிறது.

வருகிற 2025 ஆம் ஆண்டு முதல் கூட்டத்தொடர் கவர்னர் உரையோடு ஜனவரி 6-ந்தேதி தொடங்க இருப்பதாக பேரவை தலைவர் அறிவித்திருக்கிறார். ஏற்கெனவே எடப்பாடியார் பேசும்போது, நேரலை துண்டிக்கப்பட்டு ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு வருவதாக குறிப்பிட்டு இருந்தார்.நிதி அமைச்சர் கூட ரூ.26 ஆயிரம் கோடியை தமிழகத்திற்கு மத்திய நிதிநிலை அறிக்கையில் ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார். வளர்ச்சி திட்டம் எதுவும் செய்யவில்லை என்பது கடந்த நான்கு ஆண்டுகால தி.மு.க. ஆட்சியின் உண்மை நிலையாகும்.மழைநீர், வெள்ளை நீருக்கு நிவாரணம் இல்லை, வறட்சிக்கு நிவாரணம் இல்லை, பயிருக்கு நிவாரணம் இல்லை, உயிரிழப்புக்கு நிவாரணம் இல்லை என்று எதையும் செய்யாத நிலையில் தான் தி.மு.க. அரசு உள்ளது. வரும் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. 200 தொகுதியில் வெற்றி பெறும் என்று கூறுகிறார்கள். ஆனால் மக்கள் வாக்களிக்க தயாராக இல்லை. இந்த உண்மையை முதல்-அமைச்சர் தெரிந்து கொள்ள வேண்டும்.மக்கள் பிரச்சனையை பேசுகின்ற சட்டமன்றத்தில், மக்களுக்கு தேவையான சட்டங்களையும், திட்டங்களையும் நிறைவேற்றுவது தான் சட்டமன்றம். ஆனால் அங்கே என்ன நடைபெறுகிறது? எதிர்க்கட்சியினுடைய உரிமைகள் தொடர்ந்து பறிக்கப்படுகிறது.

கேள்வி நேரத்தில் கூட கேள்வி கேட்பதற்கு உரிமை மறுக்கப்படுகிறது.மக்களின் குறைகளை சட்டமன்றத்திலே எடுத்து வைத்தால் தானே, அது அமைச்சர்களுடைய கவனத்திற்கு சென்று அதற்கு தீர்வு கிடைக்கும். வருகின்ற ஜனவரி 6-ந்தேதி இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் தொடங்குகிறது. அந்த கூட்டத்தொடரில் தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் கூறியபடியே ஆண்டுக்கு100 நாட்கள் சட்டமன்ற கூட்டத்தை நடத்துவோம் என்ற தேர்தல் வாக்குறுதியை செயல்படுத்த முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்வர வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்