10 வழக்கறிஞர்களின் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிதியுதவி - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
|உயிரிழந்த 10 வழக்கறிஞர்களின் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிதியுதவியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
சென்னை,
தமிழ்நாடு வழக்கறிஞர்கள் நல நிதியிலிருந்து, உயிரிழந்த 10 வழக்கறிஞர்களின் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிதியுதவியை தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-
"தமிழ்நாடு வழக்கறிஞர்கள் நல நிதியமானது உயிரிழந்த வழக்கறிஞர்களின் வாரிசுதாரர்களுக்கு நிதியுதவி வழங்குவதற்காக நிறுவப்பட்டு, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் குழுமத்தால் நிர்வகிக்கப்படுகிறது. தமிழ்நாடு வழக்கறிஞர்கள் நல நிதியிலிருந்து பயனாளிகளுக்கு வழங்கப்படும் நிதியுதவி தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினின் தலைமையிலான அரசால் 7 லட்சம் ரூபாயிலிருந்து 10 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டது. மேலும், தமிழ்நாடு வழக்கறிஞர்கள் நல நிதிக்கு வழங்கப்படும் அரசின் ஆண்டு மானியமும் 8 கோடி ரூபாயிலிருந்து 10 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
அந்த வகையில், தமிழ்நாடு வழக்கறிஞர் நல நிதியத்திலிருந்து உயிரிழந்த 10 வழக்கறிஞர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கிடும் வகையில், தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (13.11.2024) தலைமைச் செயலகத்தில், அவ்வழக்கறிஞர்களின் வாரிசுதாரர்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் வீதம், மொத்தம் 1 கோடி ரூபாய்க்கான காசோலைகளை நிதியுதவியாக வழங்கினார்.
இந்த நிகழ்வில், சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, நாடாளுமன்ற உறுப்பினரும் மூத்த வழக்கறிஞருமான பி.வில்சன், தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ் குமார், சட்டத்துறை செயலாளர் எஸ். ஜார்ஜ் அலெக்சாண்டர், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் பி.எஸ். அமல்ராஜ், இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் துணைத் தலைவர் எஸ்.பிரபாகரன், அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ். ராமன், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்க துணைத் தலைவர் வி. கார்த்திகேயன்,
மூத்த வழக்கறிஞர் ஆர்.விடுதலை மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.