03-01-2025: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்
|உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 3 Jan 2025 8:31 PM IST
பள்ளியில் குழந்தை உயிரிழப்பு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த லியா லஷ்மி என்ற 5 வயது குழந்தை, அங்குள்ள கழிவு நீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உயிரிழந்த குழந்தை லியா லக்ஷ்மியின் பெற்றோருக்கும், அவரது உறவினர்களுக்கும் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்த குழந்தையின் பெற்றோருக்கு மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளார்.
- 3 Jan 2025 7:58 PM IST
31-ந்தேதி வரை ஜோலார்பேட்டை-காட்பாடி ரெயில் சேவை ரத்து - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
சென்னை கோட்டத்தில் மேற்கொள்ளப்பட உள்ள பராமரிப்பு பணிகள் காரணமாக ஜோலார்பேட்டை-காட்பாடி ரெயில் சேவை இரு மார்க்கத்திலும் 31-ந்தேதி வரை சில நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வெ தெரிவித்துள்ளது. மேலும் ஈரோடு-ஜோலார்பேட்டை விரைவு ரெயில், வரும் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் திருப்பத்தூர் வரை மட்டுமே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- 3 Jan 2025 6:51 PM IST
புதுச்சேரியில் பொங்கல் பரிசு அறிவிப்பு
புதுச்சேரியில் பொங்கல் பரிசுத் தொகுப்புக்குப் பதிலாக, ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.750 வழங்கப்படும் என முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
- 3 Jan 2025 6:10 PM IST
கைது செய்யப்பட்ட குஷ்பு விடுவிப்பு
மதுரையில் அனுமதியின்றி பேரணி செல்ல முயன்றதாக கைது செய்யப்பட்ட பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு, மாநில மகளிரணி தலைவர் உமாரவி உள்ளிட்ட பா.ஜ.க. மகளிரணியினர் விடுவிக்கப்பட்டனர்.
- 3 Jan 2025 5:54 PM IST
டெல்லியில் கடும் பனிமூட்டத்திற்கு மத்தியில் பாதுகாப்பு படை வீரர்கள் உற்சாகமாக குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். கர்தவ்யா பாதையில் இந்த ஒத்திகை நடைபெற்றது.
- 3 Jan 2025 5:17 PM IST
சீனா அறிவித்த புதிய மாவட்டங்கள்.. இந்தியா கடும் எதிர்ப்பு
சீனாவின் ஹோட்டன் மாகாணத்தில் 2 புதிய மாவட்டங்களை சீனா அறிவித்திருக்கிறது. இந்த மாவட்டங்களின் சில பகுதிகள் இந்திய யூனியன் பிரதேசமான லடாக்கில் வருவதால், இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
அப்பகுதியில் உள்ள இந்தியப் பகுதியின் சட்டவிரோத சீன ஆக்கிரமிப்பை இந்தியா ஒருபோதும் ஏற்கவில்லை என்று வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் கூறி உள்ளார். தூதரகம் வாயிலாக சீனத் தரப்பிற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
- 3 Jan 2025 4:59 PM IST
டெல்லியில் இன்று பிரதமர் 43 நிமிடங்கள் உரையாற்றினார். அதில், 39 நிமிடங்கள் டெல்லி மக்களையும், மக்களின் பேராதரவுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தையும் குறைகூறியிருப்பதாக ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் தெரிவித்தார்.
டெல்லியில் ஆம் ஆத்மி அரசு 10 ஆண்டுகளில் பல திட்டங்களை செயல்படுத்தி உள்ளது, மத்தியில் உள்ள பா.ஜ.க. குறிப்பிட்டு கூறும்படி எந்த திட்டத்தையும் செய்யவில்லை என்றும் கெஜ்ரிவால் கூறினார்.
- 3 Jan 2025 4:47 PM IST
டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு முதல் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்காளதேச நாட்டவர் 2 பேரை போலீசார் அடையாளம் கண்டு, அவர்களை நாடு கடத்தினர்.