'மூடா' நில முறைகேடு: ராஜினாமா செய்யும் பேச்சுக்கே இடமில்லை... கர்நாடக முதல்-மந்திரி
|தன் மீதான வழக்கை சட்டரீதியாக எதிர்கொள்வேன் என்று கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா தெரிவித்தார்.
பெங்களூரு,
மூடா 'முறைகேட்டில் தன் மீது விசாரணை நடத்த அனுமதி அளித்த கவர்னர் தாவர்சந்த் கெலாட் உத்தரவை எதிர்த்து, ஐகோர்ட்டில் முதல்-மந்திரி சித்தராமையா தொடர்ந்த ரிட் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. நீதிமன்ற உத்தரவினால் அசம்பாவிதம் ஏதும் நடைபெறா வண்ணம் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையாவின் வீட்டின் முன்பாக போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் 'மூடா' நில முறைகேடு விவகாரத்தில் நான் ராஜினாமா செய்யும் பேச்சுக்கே இடமில்லை என்றும், என் மீதான வழக்கை சட்டரீதியாக எதிர்கொள்வேன் என்றும் முதல்-மந்திரி சித்தராமையா திட்டவட்டமாக கூறினார்.
இதுதொடர்பாக பெங்களூருவில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மூடா நில முறைகேடு விவகாரத்தில் என் மீது வழக்கு தொடர கவர்னர் அனுமதி வழங்கினார். இதற்கு எதிராக கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தேன். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் முக்கியமாக பாரதிய நியாய் சுரக்ஷா சங்கித் (பி.என்.எஸ்.எஸ்.) சட்டத்தின் 218-வது பிரிவின்படியும், கர்நாடக ஊழல் தடுப்பு சட்டத்தின் 19-வது பிரிவுப்படியும் விசாரணை நடத்த ஐகோர்ட்டு அனுமதி அளிக்கவில்லை. ஊழல் தடுப்பு சட்டத்தின் 17ஏ பிரிவின் கீழ் ஆரம்ப கட்ட விசாரணை நடத்த ஐகோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.
இதற்கு எதிராக மேல்முறையீடு செய்வது குறித்து சட்ட நிபுணர்களுடன் கலந்து ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும். பா.ஜனதா, ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் சதியை கண்டு நான் அஞ்ச மாட்டேன். அவர்கள் கவர்னர் மாளிகையை தவறாக பயன்படுத்துகிறார்கள். மாநில மக்கள், எங்கள் கட்சி மேலிடம், கட்சி எம்.எல்.ஏ.க்கள் எனக்கு ஆதரவாக உள்ளனர்.
நான் எந்த தவறும் செய்யவில்லை. ஐகோர்ட்டு விசாரணைக்கு அனுமதி வழங்கிய காரணத்தால் நான் தவறு செய்துவிட்டேன் என்று அர்த்தம் இல்லை. ஐகோர்ட்டு ஊழல் தடுப்பு சட்டத்தின் 17ஏ பிரிவின்படி மட்டுமே விசாரணை நடத்த அனுமதி வழங்கியுள்ளது. எனக்கு எதிராக முழு விசாரணைக்கு அனுமதி வழங்கவில்லை.
நான் எதற்காக ராஜினாமா செய்ய வேண்டும்?. நான் ராஜினாமா செய்யும் பேச்சுக்கே இடமில்லை. இதை நான் சட்ட ரீதியாக எதிர்கொள்வேன். மத்திய மந்திரி குமாரசாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அது நிலுவையில் உள்ளது. அவர் ராஜினாமா செய்துவிட்டாரா?. இது அவருக்கு பொருந்தாதா?. இதுகுறித்து அவரிடம் போய் கேளுங்கள்" என்று அவர் கூறினார்.