< Back
மாநில செய்திகள்
பாலியல் அத்துமீறல்கள் தொடர்பாக பெண்கள் தைரியமாக புகார் அளிக்க வேண்டும்: வானதி சீனிவாசன்
மாநில செய்திகள்

பாலியல் அத்துமீறல்கள் தொடர்பாக பெண்கள் தைரியமாக புகார் அளிக்க வேண்டும்: வானதி சீனிவாசன்

தினத்தந்தி
|
3 Sept 2024 11:24 AM IST

எந்த நிலையிலும் பெண்கள் தைரியமாக இருக்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

கோவை தெற்கு தொகுதி பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பெண்கள் துணிச்சலுடன் புகார் அளிக்கும் சூழலை உருவாக்க வேண்டும். அதற்கு சட்டம் துணையாக இருக்கிறது. எனவே பெண்கள் தைரியமாக இருக்க வேண்டும். கொல்கத்தா மருத்துவக் கல்லூரியில் பயிற்சி மருத்துவர் கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.

கிருஷ்ணகிரி தனியார் பள்ளியில் போலி என்.சி.சி. முகாம் நடத்தி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது, மலையாள திரைப்பட உலகில் நடிகைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் என பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நிகழ்வது பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.

இது தொழில்நுட்ப யுகம். எந்த தவறு செய்தாலும் வெளியே தெரிந்து விடும். தப்பிக்க முடியாது என்று தெரிந்தும் பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தும் தைரியம் எப்படி வருகிறது?. பெண்கள் படித்து அறிவில் சிறந்து, உயரிய பொறுப்புகளில் இருந்தாலும் சில ஆண்களுக்கு போகப் பொருளாகவே தெரிகின்றனர்.

பெண்ணை தாயாக, சகோதரியாக, மகளாக பார்க்க கூடிய மனநிலை இருக்க வேண்டும். அது இல்லாததால் தான் திருச்சி என்.ஐ.டி.யில் ஒரு மாணவிக்கு, ஒப்பந்த பணியாளர் ஒருவர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். கல்வி நிலையங்கள், வேலை செய்யும் இடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பான நிலை ஏற்படுத்தப்பட வேண்டும். எந்த நிலையிலும் பெண்கள் தைரியமாக இருக்க வேண்டும்.

பாலியல் துன்புறுத்தல் மற்றும் அத்துமீறல்களில் ஈடுபடும் நபர்கள் குறித்து பெண்கள் தைரியமாக புகார் அளிக்க வேண்டும். பாலியல் துன்புறுத்தல்களில் ஈடுபடுவோர் யாரும் தப்பிவிடக் கூடாது. அவர்களுக்கு கிடைக்கும் தண்டனை தான் மற்றவர்களுக்கு பாடமாக அமையும். எனவே பெண்கள் துணிச்சலுடன் புகார் அளிப்பதற்கான சூழலை நிறுவனங்களும், அரசும் உருவாக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்