"விஜய் எதற்காக கட்சி தொடங்க வேண்டும்? காங்கிரஸ் அல்லது தி.மு.க.வில் சேர்ந்து விடலாமே.." - இ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேச்சு
|நடிகர் விஜய் கட்சி தொடங்குவதற்கு பதிலாக காங்கிரஸ் அல்லது தி.மு.க.வில் சேர்ந்து விடலாம் என இ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
புதிதாக கட்சி தொடங்குவற்கு பதிலாக நடிகர் விஜய் காங்கிரஸ் அல்லது தி.மு.க.வில் சேர்ந்து விடலாம் என காங்கிரஸ் மூத்த தலைவர் இ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-
"நடிகர் விஜய்யை நான் என்னுடைய மகனாக பார்க்கிறேன். அவர் இப்போது எல்லோர் வீட்டுப் பிள்ளையாகவே இருக்கிறார். அனைத்து மதம், மொழி, சாதியைச் சேர்ந்தவர்களும் விஜய்யை தங்கள் வீட்டுப் பிள்ளையாக கொண்டாடுகிறார்கள். இந்த நேரத்தில் ஒரு சின்ன வட்டத்தை போட்டுக் கொண்டு அதற்குள் இருக்கப் போகிறேன் என்று அவர் சொன்னால் யார் அதை ஏற்றுக்கொள்வார்கள்?
முதலில் எதற்காக அவர் கட்சி ஆரம்பிக்க வேண்டும். நீட் தேர்வு எதிர்ப்பு, பெண் சுதந்திரம் என அவர் பேசும் கொள்கைகள் எல்லாம் காங்கிரஸ், தி.மு.க.விலும் இருக்கின்றன. அவருக்கு பிடித்த கட்சியில் அவர் சேர்ந்துவிடலாமே. அதை விடுத்து ராஜ்ஜியமே இல்லாமல் அவர் எங்கே தனி ராஜ்ஜியம் செய்யப் போகிறார்?"
இவ்வாறு இ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்தார்.