< Back
மாநில செய்திகள்
எஸ்.பி. வேலுமணி கூறியது கட்சியின் கருத்து அல்ல - ஜெயக்குமார் பேட்டி
மாநில செய்திகள்

எஸ்.பி. வேலுமணி கூறியது கட்சியின் கருத்து அல்ல - ஜெயக்குமார் பேட்டி

தினத்தந்தி
|
7 Jun 2024 4:03 PM IST

எஸ்.பி வேலுமணி கூறியது அவரது அனுமானத்தின் அடிப்படையில் சொல்லப்பட்டது என்று அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சென்னை,

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. அ.தி.மு.க. கூட்டணி, பா.ஜ.க. கூட்டணியால் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. கோவையில் அண்ணாமலை வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் தோல்வியடைந்தார்.

இந்த நிலையில், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, "நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்திருந்தால் 30-35 தொகுதிகள் வரை வென்றிருப்போம். தமிழிசை, எல்.முருகன் இருந்தபோது அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி நன்றாகத்தான் இருந்தது; கூட்டணியில் எந்த பிரச்சினையும் இல்லை. அண்ணாமலை பா.ஜ.க. மாநில தலைவரான பிறகுதான், பா.ஜ.க. - அ.தி.மு.க. கூட்டணியில் பிளவு ஏற்பட்டது. அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி முறிவுக்கு அண்ணாமலைதான் காரணம்" என்று கூறியிருந்தார்.

இதையடுத்து தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, "2019-ல் ஆளும் கட்சியாக இருந்த அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க. கூட்டணியில் இருந்த போது, அ.தி.மு.க. படுதோல்வி அடைந்தது. இந்த நிலையில் கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பது போல, 2024 தேர்தலில் பா.ஜ.க. கூட்டணியில் இருந்திருந்தால் 30 முதல் 35 சீட்டுகள் கிடைத்திருக்கும் என்று எஸ்.பி.வேலுமணி கூறியிருக்கிறார்.

தனியாக இருந்தே அ.தி.மு.க. ஒரு சீட்டு கூட பெறவில்லை. அப்படியிருக்கும்போது ஒன்றாக இருந்திருந்தால் 35 சீட்டுகள் கிடைத்திருக்கும் என்று எப்படி அவர் சொல்கிறார்? எஸ்.பி.வேலுமணி கூறியதை பார்க்கும்போது, எடப்பாடி பழனிசாமிக்கும், எஸ்.பி. வேலுமணிக்கும் இடையே உட்கட்சி பிரச்சினை இருப்பது போல் தெரிகிறது. அ.தி.மு.க. தலைவர்களை தமிழக மக்கள் நிராகரித்து விட்டனர் என்பது தான் தேர்தல் தரும் பாடம்" என்று விமர்சித்திருந்தார்.

இந்த நிலையில் எஸ்.பி.வேலுமணி கூறியது அ.தி.மு.க.வின் கருத்து அல்ல என்று அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

அண்ணாமலை புள்ளி ராஜாவாகிவிட்டார். அந்த கட்சி எவ்வளவு? இந்த கட்சி எவ்வளவு? என புள்ளி விவரங்கள் எடுக்கும் ஐ.பி.எஸ். அதிகாரியாகத்தான் செயல்படுகிறார். ஒரு கட்சியின் தலைவராக அவரது பேச்சு இல்லை. 2014-ல் பா.ஜ.க. கூட்டணி வாங்கிய வாக்கை விட தற்போது குறைவாகத்தான் வாங்கியிருக்கிறது. இதை ஏன் அண்ணாமலை பேச மறுக்கிறார்?

பிரதமர் மோடியை 8 முறை தமிழ்நாட்டுக்கு அழைத்து வந்தும் ஒரு இடத்தில் கூட பா.ஜ.க.வால் வெல்ல முடியவில்லை. பா.ஜ.க.வுக்கு ஒரு வளர்ச்சியும் இல்லை. தமிழகத்தில் பா.ஜ.க., ஆர்.சி.பி. அணி போன்றது; தோற்று கொண்டே தான் இருக்கும். அ.தி.மு.க., சி.எஸ்.கே. மாதிரி; 30 ஆண்டுகள் வெற்றிகளை குவித்தோம். வரவிருக்கும் தேர்தலில் சாதனைகள் குவிக்கப் போகிறோம்.

எஸ்.பி வேலுமணி கூறியது அவரது அனுமானத்தின் அடிப்படையில் சொல்லப்பட்டது. அதற்கு பதில் சொல்ல முடியாது. பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்பதுதான் அ.தி.மு.க.வின் நிலைப்பாடு. எங்களது தலைவர்களை விமர்சனம் செய்தவர்களைத்தான் நாங்கள் விமர்சனம் செய்தோம். தேர்தலில் வெற்றி, தோல்வி சகஜம். அ.தி.மு.க. தமிழகத்தை 30 ஆண்டுகள் ஆண்ட கட்சி. 2026-ல் தமிழகத்தில் ஆட்சி செய்யப் போகிற கட்சியும் அ.தி.மு.க. தான். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்