தி.மு.க - பா.ஜ.க திடீர் பாச உறவு காட்டிக்கொள்வதன் மர்மம் என்ன? - ஆர்.பி.உதயகுமார் கேள்வி
|அரசியல் அனுபவமும் புரிதலும் இல்லாத தலைவராக அண்ணாமலை இருப்பதாக ஆர்.பி.உதயகுமார் பேசினார்.
மதுரை,
மதுரையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;
பா.ஜ.க.வை தமிழ்நாட்டிற்குள் விட மாட்டேன் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.ஆனால் ரூ.100 நாணயம் வெளியீட்டு விழாவின் மூலம் பா.ஜ.க.வை சிவப்பு கம்பளம் விரித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றுள்ளார். 'Go Back Modi' என கூறிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தற்போது 'Welcome Modi' என வரவேற்கிறார்"
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு நினைவு ரூ.100 நாணயம் வெளியீட்டு விழா மத்திய அரசு நிகழ்ச்சி என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுகிறார். ஆனால் மாநில அரசு தான் நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை வழங்கியுள்ளது. மத்திய அரசு விழா என்று மாநில அரசு சொல்வது முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் செயல்.
தி.மு.க - பா.ஜ.க திடீர் பாச உறவு காட்டிக்கொள்வதில் என்ன மர்மம் உள்ளது? தமிழக மக்களை ஏமாற்றும் வகையில் முதல்-அமைச்சர் ஸ்டாலின் பா.ஜ.க.வோடு இணக்கம் காட்டி வருகிறார். பா.ஜ.க உடன் ரகசிய கூட்டணி வைத்துக்கொண்டு மக்களை ஏமாற்றாதீர்கள். பாஜக - திமுக இடையேயான உறவை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.
அரசியல் அனுபவமும் புரிதலும் இல்லாத தலைவராக அண்ணாமலை உள்ளார். அண்ணாமலைக்கு இன்னும் அரசியல் அனுபவம் தேவை. அண்ணாமலைக்கு தமிழகத்தின் நிலவரமும், கலவரமும் தெரியவில்லை."
இவ்வாறு அவர் பேசினார்.