< Back
மாநில செய்திகள்
கல்விக்கான நிதியை போராடி பெறுவோம்: அமைச்சர் அன்பில் மகேஷ்
மாநில செய்திகள்

கல்விக்கான நிதியை போராடி பெறுவோம்: அமைச்சர் அன்பில் மகேஷ்

தினத்தந்தி
|
10 Sept 2024 12:32 PM IST

மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ள கல்விக்கான நிதியை போராடி பெறுவோம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.

திருச்சி,

திருச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால்தான் பணம் கொடுப்பேன் என்று மத்திய மந்திரி கூறுவது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. எங்களுடைய கொள்கையை விட்டுக் கொடுத்து நிதியைப் பெற வேண்டும் என்ற அவசியம் எங்களுக்கு இல்லை. கொள்கை என்று வந்தால் எந்த ஒரு நிபந்தனைகளுக்கும் நாங்கள் ஒத்துப்போக மாட்டோம். மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ள கல்விக்கான நிதியை மீண்டும் போராடி பெறுவோம். மத்திய அரசு நிதி வழங்காததைப் பற்றி பேசாமல் பாஜகவினர் மகா விஷ்ணுவைப் பற்றி பேசுகின்றனர்.

திருச்சி மணப்பாறையில் ஜாபில் நிறுவன தொழிற்சாலை அமைவதால் திண்டுக்கல் சுற்றுவட்டார மக்கள் பயன்பெறுவர். மணப்பாறையில் ஜாபில் நிறுவனம் ரூ.2,000 கோடி முதலீடு செய்வதன் மூலம் 5,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். இதுவரை காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூரில் செயல்பட்டு வந்த எலக்ட்ரானிக் தொழிற்சாலைகள் தற்போது திருச்சிக்கு வர உள்ளன.

மகாவிஷ்ணு தொடர்பான முழுமையான விசாரணை முடிந்த பிறகு, அறிக்கை தாக்கல் செய்யப்படும். அதன்பின்னர் அதுதொடர்பான முடிவு எடுக்கப்படும். பள்ளியில் மூடநம்பிக்கை கருத்துகளை அவர், பேசி இருப்பதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. 22 அறிவு சார்ந்த முன்னெடுப்புகளை பள்ளிக்கல்வித்துறை எடுத்துவரும்போது, இது போன்ற மூடநம்பிக்கைகளைத் .திணிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளி உள்ளிட்ட அனைத்து பள்ளிகளுக்கும் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும். மதம் சார்ந்து கல்விக்குள் எந்த ஒரு விஷயமும் கலக்கக்கூடாது என்பதில் உறுதியாய் இருக்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்