ஆற்காடு சுரேஷின் பிறந்த நாளில் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக கைதானவர்கள் பரபரப்பு வாக்குமூலம்
|ஆற்காடு சுரேசின் பிறந்தநாளில் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக சரண் அடைந்தவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
சென்னை,
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று இரவு சென்னை பெரம்பூரில் புதிதாக கட்டப்படும் அவரது வீடு அருகே மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் அவரை கழுத்து, தலை ஆகிய இடங்களில் சரமாரியாக வெட்டி கொன்றுவிட்டு தப்பியோடி விட்டனர்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த கொலை சம்பவத்திற்கு பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி உள்பட பல கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து, பகுஜன் சமாஜ் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்துவிட்டு தப்பியோடிய கும்பலை போலீசார் 6 தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த சூழலில் பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 8 பேர் போலீசில் சரணடைந்துள்ளனர். ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக ஆற்காடு சுரேஷின் சகோதரர் ஆற்காடு பாலு உள்பட 8 பேர் அண்ணாநகர் துணை ஆணையர் முன் சரணடைந்தனர். சரணடைந்த 8 பேரையும் கைது செய்த போலீசார் இந்த கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்த வழக்கில் சரணடைந்த ஆர்காடு சுரேசின் தம்பி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். முன்னதாக அண்ணன் ஆற்காடு சுரேசின் பிறந்தநாள் அல்லது நினைவு நாளுக்கு, ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய ஆற்காடு பாலு தீட்டம் தீட்டி இருந்ததாக தெரிகிறது.
இந்த சூழலில் ஜெயபால் மற்றும் ஆம்ஸ்ராங்கின் ஆதரவாளர்கள் தனக்கு மிரட்டல் விடுத்ததால் தனது மனைவி பிரிந்து சென்று விட்டார் என்றும் அண்ணனும் இல்லை, மனைவியும் இல்லை என்பதால் தன்னையும் கொல்வதற்கு முன்னர் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய ஆற்காடு பாலு திட்டம் தீட்டியதாக வாக்கு மூலம் அளித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தென்னரசு கொலை வழக்கில் தன்னோடு சிறையில் இருந்தவர்கள், சுரேசின் கிளப் ஊழியர்கள் மற்றும் ஆதரவாளர்கள் உடன் சேர்ந்து கொலை செய்ததாகவும், ஆற்காடு சுரேசின் பிறந்தநாளில் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாகவும் கைதானவர்கள் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.
இதனிடையே ஆம்ஸ்ட்ராங்கின் உயிருக்கு ஆபத்து இருந்ததாக உளவுத்துறையும், ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவும் 3 முறை எச்சரிக்கை விடுத்திருந்ததாகவும், உளவுத்துறையின் எச்சரிக்கையை செம்பியம் போலீசார் கண்டு கொள்ளவில்லை என்றும் தகவல் வெளியாகி உள்ளது. எப்போதும் ஆதரவாளர்கள் உடன் இருக்கும் ஆம்ஸ்ட்ராங் தனியாக இருக்கும் நேரத்தை கொலை கும்பல் கண்காணித்து வந்ததாக தெரிகிறது. இந்த சம்பவம் குறித்து காவல்துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.