'இந்தியா' கூட்டணி வெற்றியை நாளை கொண்டாட உள்ளோம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
|கலைஞரின் 101வது பிறந்தநாளை ஒட்டி, அவரது உருவப்படத்திற்கு இந்தியா கூட்டணி தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
சென்னை,
கலைஞரின் 101வது பிறந்தநாளை ஒட்டி, டெல்லியில் உள்ள தி.மு.க. அலுவலகத்தில் அவரது உருவப்படத்திற்கு காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி மற்றும் இந்தியா கூட்டணி தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த நிலையில், டெல்லியில் இந்தியா கூட்டணி தலைவர்கள் கருணாநிதிக்கு மரியாதை செலுத்தியதைக் குறிப்பிட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;
'இந்தியா' கூட்டணி தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல்காந்தி, சீதாராம் யெச்சூரி ஆகியோர் டெல்லியில் ஒன்று கூடி முத்தமிழ் அறிஞர் கலைஞரின் பிறந்த நாள் மற்றும் நூற்றாண்டு நிறைவு விழாவில் இதயப்பூர்வமான அஞ்சலி செலுத்தினர்.
கருணாநிதியை மாநில தலைவராக மட்டுமின்றி தேசிய அளவிலான தலைவராக போற்றி வணங்குகிறோம். தேசக் கட்டுமானத்தில் முக்கியப் பங்காற்றிய கலைஞர், கூட்டாட்சி மற்றும் மக்களாட்சிக்காக குரல் கொடுத்தவர்.
பல பிரதமர்கள், குடியரசுத் தலைவர்களை முடிவு செய்ததில் முக்கியப் பங்கு வகித்தவர் கலைஞர். நமது கூட்டணியின் வெற்றியை, இந்திய மக்களுக்கான வெற்றியை கொண்டாட ஆவலுடன் காத்திருக்கிறோம்." இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.