போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை: ஆகஸ்டு 27-ந் தேதி நடக்கிறது
|15-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை வருகிற ஆகஸ்டு 27-ந் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை,
அரசு போக்குவரத்து கழகங்களின் வரவுக்கும், செலவுக்குமான வித்தியாசத் தொகையை பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும். போக்குவரத்து கழக ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக, தொழிற்சங்கங்கள், போக்குவரத்து கழக நிர்வாகிகள் பங்கேற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை தொழிலாளர் தனி இணை ஆணையர் எல்.ரமேஷ் முன்னிலையில் நேற்று நடைபெற்றது.
டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள தொழிலாளர் துறை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சென்னை மாநகர போக்குவரத்து கழக இணை மேலாண் இயக்குனர் எஸ்.நடராஜன், விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் ஆர்.மோகன் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் சி.ஐ.டி.யு. தொழிற்சங்க பொதுச்செயலாளர் ஆறுமுக நயினார், ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்க பொதுச்செயலாளர் ஆறுமுகம், அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் கமலக்கண்ணன், நாம் தமிழர் தொழிற்சங்க பேரவை மாநில தலைவர் அன்புத்தென்னரசன், பொதுச்செயலாளர் சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சரியான முடிவுகள் எட்டப்படாத நிலையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.
எனினும், அடுத்தகட்டமாக வருகிற ஆகஸ்டு 27-ந் தேதி நடைபெற இருக்கும் 15-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையுடன் இந்த கோரிக்கைகளையும் பேசலாம் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து பின்னர் செய்தியாளர்களிடம் தொழிற்சங்க நிர்வாகி ஆறுமுக நயினார் கூறும்போது, "ஆகஸ்டு 27-ந் தேதி நடைபெற உள்ள 15-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையின் போது அனைத்து விஷயங்களையும் பேசிக்கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். ஓய்வூதியர்களுக்கான பணப்பலன்கள், அகவிலைப்படி உயர்வு தொடர்பாக அரசின் பதிலுக்காக காத்திருப்பதாக அதிகாரிகள் கூறினர். காலிப்பணியிடங்களை நிரந்தரமாக பூர்த்தி செய்ய வலியுறுத்தினோம். ஆனால் அதற்கான எந்த அரசாணையும் பிறப்பிக்கப்படவில்லை. மினி பஸ் சம்பந்தமாக போடப்பட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளோம்" என்றார்.
அண்ணா தொழிற்சங்க பேரவைச் செயலாளர் ஆர்.கமலகண்ணன் கூறும்போது, "அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்ட ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை, தி.மு.க. ஆட்சியில் 4 ஆண்டுகளாக மாற்றப்பட்டது. தற்போது 5-ம் ஆண்டில் 10-வது மாதத்தை கடந்துவிட்டோம். எனவே, வருகிற ஆகஸ்டு 27-ந் தேதி நடைபெறும் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை இன்னும் 6 மாதத்திற்கு இழுத்துச்செல்லாமல் உடனடியாக நடத்தி முடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்" என்றார்.