செஞ்சிக் கோட்டையை பார்வையிட 27-ம் தேதி அனுமதி இல்லை - மாவட்ட கலெக்டர் அறிவிப்பு
|யுனெஸ்கோ குழுவினா் வரும் 27ம் தேதி வந்து ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக விழுப்புரம் மாவட்ட கலெக்டர்தெரிவித்துள்ளாா்.
விழுப்புரம்,
செஞ்சிக் கோட்டையை பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ தேர்வு செய்துள்ள நிலையில், அதன் குழுவினா் வரும் 27-ம் தேதி செஞ்சிக் கோட்டைக்கு வந்து ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் செஞ்சிக் கோட்டையை யுனெஸ்கோ குழுவினர் நாளை மறுநாள் ஆய்வு செய்ய உள்ளதால், அன்று ஒரு நாள் மட்டும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் செஞ்சிக்கோட்டையை பார்வையிட அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி அறிவித்துள்ளார்.
முன்னதாக பாதுகாக்கப்பட்ட தேசிய நினைவு சின்னமாக உள்ள செஞ்சிக் கோட்டையை இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த செஞ்சிக் கோட்டையை உலக பாரம்பரிய நினைவு சின்னமாக அறிவிக்க வேண்டும் என யுனெஸ்கோவிற்கு கடந்த 2011ம் ஆண்டு இந்திய தொல்லியல் துறை பரிந்துரை செய்தது.
இந்த சூழலில் மத்திய அரசு யுனெஸ்கோவிற்கு சத்ரபதி சிவாஜியின் ஆட்சியின் கீழ் இருந்த 11 கோட்டைகளை உலக பாரம்பரிய நினைவு சின்னமாக அறிவிக்க பரிந்துரை செய்துள்ளது. இதில் 10 கோட்டைகள் மராட்டிய மாநிலத்திலும், தமிழகத்தில் செஞ்சி கோட்டையும் உள்ளன. யுனெஸ்கோ குழு உலக பராரம்பரிய நினைவு சின்னமாக அறிவிப்பதற்கு யுனெஸ்கோவின் விதிமுறைகள் படி செஞ்சி கோட்டை உள்ளதா என ஆய்வு செய்ய, வரும் 27ம் தேதி இதற்கான ஆய்வு குழுவினர் செஞ்சிக் கோட்டைக்கு வர உள்ளனர்.