விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்: சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம்
|விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் இன்று நடைபெறுவதையொட்டி சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
சென்னையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் இன்று நடைபெறுவதையொட்டி போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை முன்னிட்டு இன்று சென்னையின் பல்வேறு இடங்களிலிருந்து பெருமளவில் விநாயகர் சிலைகள் சீனிவாசபுரம், பட்டினப்பாக்கம் கடலில் கரைப்பதற்காக கொண்டுவரப்படும். இதை முன்னிட்டு காமராஜர் சாலை, சாந்தோம் நெடுஞ்சாலையில் பாதசாரிகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கும். எனவே மக்கள் நடமாட்டத்திற்கு ஏற்ப தேவைப்படும் பட்சத்தில் கீழ்கண்டவாறு போக்குவரத்து மாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்படும்.
* விநாயகர் சிலை ஊர்வலத்தின் காரணமாக திருவல்லிக்கேணியிலிருந்து சாந்தோம் நெடுஞ்சாலை நோக்கி வரும் வாகனங்கள், மெதுவாக சென்று, காந்தி சிலையிலிருந்து வலதுபுறமாக ஆர்.கே. சாலை - வி.எம் தெரு - இடது - லஸ் சந்திப்பு - அமிர்தாஞ்சன் சந்திப்பு -டிசில்வா சாலை - வாரன் சாலை - வலது - டாக்டர் ரங்கா சாலை - பீமண்ண கார்டன் சந்திப்பு - இடது திருப்பம் - சி.பி. ராமசாமி சாலை - செயின்ட் மேரிஸ் சந்திப்பு - காளியப்பா சந்திப்பு - இடதுபுறம் ஸ்ரீநிவாசா அவென்யூ - ஆர்.கே.மட் சாலை வழியாக சென்று அவர்கள் இலக்கை அடையலாம்.
* விநாயகர் சிலை ஊர்வலத்தின் காரணமாக சாந்தோம் சாலை வழியாக செல்லும் வாகனங்கள், காந்தி சிலையிலிருந்து வலதுபுறம் ஆர்.கே. சாலை - வி.எம். தெரு இடது - லஸ் சந்திப்பு - அமிர்தாஞ்சன் சந்திப்பு - டிசில்வா சாலை - வாரன் சாலை - வலது - டாக்டர்.ரங்கா சாலை - பீமண்ண கார்டன் சந்திப்பு - இடது திருப்பம் - சிபி ராமசாமி சாலை - செயின்ட் மேரிஸ் சந்திப்பு - காளியப்பா சந்திப்பு - இடதுபுறம் ஶ்ரீநிவாசா அவென்யூ - ஆர்.கே. மட் சாலை வழியாக சென்று அவர்கள் இலக்கை அடையலாம்.
* ஊர்வலம் ரத்னா கபே சந்திப்புக்கு அருகில் வரும்போது, ஜாம் பஜார் போலீஸ் நிலையத்தில் இருந்து எந்த வாகனமும் அனுமதிக்கப்படாது. ரத்னா கபே சந்திப்புக்கு பதிலாக இந்த வாகனங்கள் ஜானி ஜான் கான் சாலை வழியாக சென்று அவர்கள் இலக்கை அடையலாம்.
* ஊர்வலம் டி.எச்.சாலைக்குள் நுழையும் போது, ஐஸ் ஹவுஸ் சந்திப்பில் இருந்து ரத்னா கபே சந்திப்பு நோக்கி வாகனங்கள் அனுமதிக்கப்படாது, அதற்கு பதிலாக இந்த வாகனங்கள் பெசன்ட் சாலை, காமராஜர் சாலை வழியாக திருப்பி விடப்படும் அல்லது இடதுபுறம் ஜி.ஆர்.எச். சந்திப்பை நோக்கி சென்று அவர்களின் இலக்கை அடையலாம்.
* மந்தைவெளியில் இருந்து சாந்தோம் சாலையை நோக்கி வரும் வாகனங்கள் தேவைப்பட்டால் தேவநாதன் தெரு - ஆர்.கே. மட் சாலை வழியாக திருப்பி விடப்படும்.
* கலங்கரை விளக்கம் முதல் சீனிவாசபுரம் உள்ள லூப் ரோட்டில் விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு செல்லும் வாகனம் மட்டும் அனுமதிக்கப்படும்.
* விநாயகர் சிலைகள் கரைக்கும் இடங்களை சுற்றி சுமார் 10 கி.மீ சுற்றளவிற்கு எந்தவித வணிக வாகனங்களும் செல்ல அனுமதி இல்லை.
வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.