< Back
மாநில செய்திகள்
விளவங்கோடு இடைத்தேர்தல்: விஜயதரணியின் சாதனையை முறியடித்த தாரகை கத்பர்ட்
மாநில செய்திகள்

விளவங்கோடு இடைத்தேர்தல்: விஜயதரணியின் சாதனையை முறியடித்த தாரகை கத்பர்ட்

தினத்தந்தி
|
6 Jun 2024 8:49 AM IST

விளவங்கோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பர்ட் அமோக வெற்றி பெற்றார்.

குமரி,

குமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் விளவங்கோடு தொகுதியும் ஒன்றாகும். இந்த தொகுதியில் கடந்த 2011, 2016, 2021-ம் ஆண்டுகளில் நடந்த 3 சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு தொடர்ந்து 3 முறை வெற்றி பெற்றவர் விஜயதரணி. இவருக்கும், காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜனதா கட்சியில் சேர்ந்தார்.

இதன் காரணமாக விளவங்கோடு தொகுதி எம்.எல்.ஏ. பதவியையும் அவர் ராஜினாமா செய்தார். இதனால் நாடு முழுவதும் நடந்த நாடாளுமன்ற பொதுத்தேர்தலுடன், விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தலும் சேர்த்து நடத்தப்பட்டது. விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் தாரகை கத்பர்ட் களமிறக்கப்பட்டார். தற்போது அவர் அமோக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

கடந்த 2021-ம் ஆண்டு நடந்த விளவங்கோடு சட்டமன்ற பொதுத்தேர்தலில் விஜயதரணி 87 ஆயிரத்து 473 வாக்குகள் பெற்று 3-வது முறையாக வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜனதா வேட்பாளர் ஜெயசீலன் 58 ஆயிரத்து 804 வாக்குகள் பெற்றார். இதனால் ஜெயசீலனை விட, விஜயதரணி 28 ஆயிரத்து 669 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

தற்போது நடந்த விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பர்ட் 91 ஆயிரத்து 54 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜனதா வேட்பாளர் நந்தினி 50 ஆயிரத்து 880 வாக்குகள் பெற்றார். இதனால் தாரகை கத்பர்ட் தன்னை எதிர்த்து போட்டியிட்ட நந்தினியை 40 ஆயிரத்து 174 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முந்தைய சாதனையை முறியடித்தார்.

விஜயதரணியை விட தாரகை கத்பர்ட் கூடுதல் வாக்குகள் பெற்றிருப்பதும், அவரைவிட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருப்பதும் விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் தொண்டர்களுக்கு புதிய உற்சாகத்தையும், உத்வேகத்தையும் கொடுத்துள்ளது.

மேலும் செய்திகள்