< Back
மாநில செய்திகள்
மும்முனை போட்டியில் விக்கிரவாண்டி:  அனல் பறந்த தலைவர்களின் பேச்சு; பிரசாரம் ஓய்ந்தது
மாநில செய்திகள்

மும்முனை போட்டியில் விக்கிரவாண்டி: அனல் பறந்த தலைவர்களின் பேச்சு; பிரசாரம் ஓய்ந்தது

தினத்தந்தி
|
8 July 2024 1:06 PM GMT

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பாக அன்னியூர் சிவா, பா.ம.க. சார்பாக சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பாக டாக்டர் அபிநயா உள்பட மொத்தம் 29 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

விக்கிரவாண்டி,

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ.வான தி.மு.க.வை சேர்ந்த நா. புகழேந்தி, உடல் நலக்குறைவால் கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி அவர் மரணம் அடைந்தார். இதனையடுத்து விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

அதன்படி நாளை மறுநாள் (புதன்கிழமை) வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வருகிற 13ம் தேதி (சனிக்கிழமை) வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பாக அன்னியூர் சிவா, பா.ம.க. சார்பாக சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பாக டாக்டர் அபிநயா உள்பட மொத்தம் 29 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். விக்கிரவாண்டியில் மும்முனை போட்டி ஏற்பட்டு உள்ளது.

தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். தேர்தலை முன்னிட்டு, விக்கிரவாண்டியில் இறுதிக்கட்ட பிரசாரம் இன்று சூடு பிடித்திருந்தது. இதில், அரசின் நலத்திட்டங்களை கூறி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது அவர், அ.தி.மு.க.வுக்கு தொடர் தோல்வி பயம். அதனால் அவர்கள் போட்டியிடவில்லை. நீட் தேர்வுக்கு ஆதரவு தெரிவிக்கும் பா.ஜ.க.வுடன், பா.ம.க. கூட்டணியில் உள்ளது.

கடந்த 5 ஆண்டுகளாக தமிழக மக்கள் தொடர் வெற்றியை அளித்து வருகிறீர்கள். 80 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அன்னியூர் சிவாவை வெற்றி பெற செய்ய வேண்டும் என்று கேட்டு கொண்டார்.

இதேபோன்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரசாரத்தில் ஈடுபட்டபோது, இது முக்கியமான தேர்தல். சமூக நீதிக்கான தேர்தல். தி.மு.க. கொடுத்த வாக்குறுதிகளை இதுவரை நிறைவேற்றவில்லை. நீட் தேர்வு ரத்து என்றார்கள். ரத்து செய்தார்களா?

நீட் தேர்வு ரத்து குறித்து, பிரசாரத்திற்கு வந்துள்ள அமைச்சர் உதயநிதியிடம் கேளுங்கள் என்று கூறினார். மாம்பழத்திற்கு வாக்களித்தால், நல்ல எதிர்காலம் உண்டு. தி.மு.க. அரசிடம் எந்த தொலைநோக்கு திட்டங்களும் இல்லை. தனது பிரசாரத்தில் பங்கேற்காத வகையில் மக்களை அடைத்து வைக்கின்றனர் என்று அவர் பேசியுள்ளார்.

தொடர்ந்து அவர், மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். மக்களை அடைத்து வைக்கும் கலாசாரத்தை கண்டுபிடித்தவர் செந்தில் பாலாஜி. பா.ம.க. வேட்பாளரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று அவர் கேட்டு கொண்டார்.

இதேபோன்று நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அபிநயாவை ஆதரித்து சீமான் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசும்போது, 60 ஆண்டு குப்பையை, 5 ஆண்டுகளில் அகற்றுவது என்பது சிரமம்.

நான் கருப்பாக, குள்ளமாக இருப்பதால் என் பேச்சை மக்கள் கேட்பது இல்லை. நான் வெள்ளையாக இருந்து, ஆங்கிலத்தில் பேசி இருந்தால் மக்கள் கேட்டு இருப்பார்கள்.

நான் தமிழன் என்பதுதான் என்னுடைய அடையாளம். பலர் சாதியை இனம் என்று பேசி வருகின்றனர். அது தவறு. ஒரு மொழியை பேசக்கூடிய குழுக்கள்தான் இனம் என்று பேசியுள்ளார்.

நான் போதிக்கும்போது உங்களுக்கு புரியாது. பாதிக்கும்போது உங்களுக்கு புரியும். சாதி, மதம் எல்லாம் நேற்று வந்தது என்று அவர் பேசியுள்ளார். மும்முனை போட்டியை சந்தித்துள்ள விக்கிரவாண்டி தொகுதியின் இடைத்தேர்தலுக்கான பிரசாரத்தில் தலைவர்களின் பேச்சு அனல் பறக்கும் வகையில் இருந்தது. இந்நிலையில், தேர்தல் பிரசாரம் ஓய்ந்துள்ளது. நாளை மறுநாள் வாக்களிக்க மக்கள் தயாராகி வருகின்றனர்.

மேலும் செய்திகள்